Sri Lanka Parliament: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரும் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு:


இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கொள்கைகளை கொண்ட அதிபர் அனுரா குமார திசநாயகே, நாடாளுமன்றத்தை கலைப்பதாக உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஓராண்டிற்கு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு, வரும் நவம்பர் 14 ஆம் தேதி, நாடாளுமன்ற தேர்தலை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு செவ்வாய்கிழமை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.  225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், திசநாயகேவின் மக்கள் விடுதலை முன்னணி கட்சி வெறும் மூன்று உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை முடித்து வரும் நவம்பர் 21ம் தேதி முதல் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடயே, ஹரிணி அமரசூர்யா என்பவரை, இலங்கையின் இடைக்கால பிரதமராக நியமித்து அனுரா குமார திசநாயகே உத்தரவிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தை கலைக்க காரணம் என்ன?


கடனில் மூழ்கியுள்ள நாட்டை அதன் பொருளாதாரச் சீர்கேட்டிலிருந்து விடுவிப்பதற்கான , பெரும் பணி புதிய அதிபரின் தோள்களில் உள்ளது. இந்த சூழலில், அவரது தலைமயிலான கூட்டணி, நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. இது அவரது கொள்கைகளை செயல்படுத்த சிக்கலாக இருக்கும் என்பதால், நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக கூறப்படுகிறது. சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கும், நாட்டில் தற்போது நிலவும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும், நாடாளுமன்றத்தில் தனக்கான ஆதரவை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 5 வருட பதவிக்காலம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பொதுத்தேர்தல், இலங்கையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் பொருளாதார நெருக்கடி:


2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் பொருளாதாரம் கடுமையான நிதிச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது, அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் போனது. இதனால் வெடித்த மக்கள் புரட்சியால், அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ தனது பதவியை ராஜினாமா செய்தார்.


அவரது பிரச்சாரத்தில், $2.9 பில்லியன் IMF பிணை எடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றத்தை வழங்குவதாக திசநாயகே தேர்தல் பரப்புரையின் போது உறுதியளித்தார். தற்போதுள்ள நலத்திட்டங்களை விரிவுபடுத்தவும், போராடும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உறுதியளித்துள்ளார். எவ்வாறாயினும், வரிகளைக் குறைப்பதற்கும் பிணை எடுப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் அவர் முன்வைத்துள்ள திட்டங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை எழுப்பியுள்ளன. இலங்கையின் முக்கியமான $25 பில்லியன் கடன் மறுசீரமைப்பில் தாமதம் ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.


நிலையான பொருளாதார வளர்ச்சியை மீளமைத்தல், சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளை உறுதிப்படுத்துதல், முதலீட்டை ஈர்த்தல் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 25% இலங்கையின் 22 மில்லியன் குடிமக்களுக்கு வறுமையைப் போக்குதல் போன்ற பணிகளில் முதலில் கவனம் செலுத்த அனுரா குமார திசநாயகே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.