இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் நாடகமும் மக்கள் புரட்சியும் நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது. என்ன நடக்கப்போகிறது எனச்சொல்வது பில்லியன் டாலர் கேள்வியாக த ற்போது மாறிவிட்டது என்றே சொல்லலாம்.


அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகிவிட்டார் என்று கூறப்பட்டாலும், இன்னமும் அவர் அதிகாரப்பூர்வமாக தமது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை. இந்தத் தகவலை, நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த அபயவர்த்தனா உறுதிப்படுத்தி இருந்தார். 


இந்தச்சூழலில்,  நாட்டை விட்டு தப்பியோடும் போது, இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளதாக தம்மிடம் தெரிவித்தார் என புதிய அதிரடி அறிவிப்பை தற்போது சபாநாயகர் மகிந்த யாப்ப அபயவர்த்தனா தெரிவித்துள்ளார் .


இதனால், இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளதால், இன்னமும் அதிபராக கோத்தபய தொடர்கிறார் என்ற கேள்வியும் ஏற்பட்டுள்ளது.  நாட்டில் தாம் இல்லாததால், இடைக்கால ஏற்பாடாக இதை அதிபர் கோத்தபய  செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.


மாலத்தீவில் தற்போது இருக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்ச, துபாய் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் இதற்காக, அங்கு தனி சொகுசு பங்களா தயாராவதாகவும் தகவல்கள்  கசிகின்றன. தாம் அதிபராக இருந்தாலும், தமக்கு சட்டப்பாதுகாப்பு  இருக்கும் என்பதால், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தங்குவதில் சிக்கல் வராது என கோத்தபய நம்புவதாகக் கூறப்படுகிறது.  இந்தச்சூழலில், தற்போது புதிய இடைக்கால அதிபராக ரணில் பொறுப்பேற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.




அதிபர் பதவியில் இருந்து கோத்தபய  ராஜபக்ச மட்டுமல்ல, பிரதமர் பதவியில் இருந்து ரணிலும் விலக வேண்டும் என்றுதான் கடந்த 2 வாரங்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், இடைக்கால அதிபராக ரணீல் என்ற தகவல், போராட்டத்தை மேலும் அதிகமாக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல மாகாணங்களில், அவசர நிலையை ரணீல் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில்,   போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைத் துரத்தி அடிக்கும் வேலையை பாதுகாப்புப்படையினர் செய்து வருகின்றனர். பல இடங்களில் கண்ணீர் புகைவீச்சு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.


இலங்கை அரசியல் சாசன சட்டப்படி, அதிபர் பதவி விலகினால், அடுத்த அதிபராக பிரதமராக வருவார். பிரதமரும் பதவியில் இல்லாவிட்டால், அவருக்கு அடுத்தபடியாக உள்ள நாடாளுமன்ற சபாநாயகர் இடைக்கால அதிபராக பதவியேற்பார். அதன்பின், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்படும் எம்பி ஒருவர், அதிபராக பதவியேற்க வேண்டும் என்பதுதான் விதி.


ஆனால், தற்போது இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக கூறிய கோத்தபய, ராஜினாமா கடிதம் கொடுக்காததால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் சாசன நிபுணர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.


வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களைப் பொறுத்தவரை, கோத்தபய ராஜபக்சவும் ரணிஸ் விக்கிரமசிங்கேவும் பதவியில் இருக்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளனர். அவர்கள் இருவரும் விலகுநம் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். 


இந்தச்சூழலில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி என தமிழில் அழைக்கப்படும் Samagi Jana Balawegaya கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா என்ன செய்யப்போகிறார் என்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. எம்பி-க்கள் ஆதரவு தமக்கு இருப்பதால், தாமே அதிபராக பதவியேற்பேன் என அவர் கூறி வந்த நிலையில், தற்போது இடைக்கால அதிபராக ரணில் நியமிக்கப்பட்டிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்ந்த தமிழ் எம்பி-க்களைப் பொறுத்தமட்டில், “வெயிட் அன்ட் சீ” என்ற நிலையில், அரசியல் நகர்வுகளை பார்த்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால்,சஜித் பிரேமதாசவுக்கு, தமிழ் எம்பி-க்கள் ஆதரவுக் கரம் நீட்ட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கரான ரணு தனசிங்கம் ஏபிபி நாடுவிடம்  தெரிவித்தார்.


அதிகாரத்தை யார் பிடித்தாலும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க பன்னெடுங்காலம் பிடிக்கும் என பன்னாட்டு நிதி மையமான ஐ.எம். ஃஎப் உள்ளிட்ட பொருளாதார அமைப்புகள்  கூறிவரும் நிலையில், தற்போது இலங்கையின் நிலைமை மேலும் இடியாப்ப சிக்கலுக்குள் சென்றுள்ளது. 


இலங்கையின் தற்போதைய நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவும் சீனாவும் இதே நிலையைதான் தற்போது கையாண்டு வருகின்றன. சமாளிக்க முடியாத அளவில், உச்சநிலையில் குழப்பம் இருக்கும் இன்றைய சூழலில், இதுவரை இந்தியாவையோ அல்லது மற்ற நாடுகளையோ தலையிடும்படி, அதிகாரப்பூர்வாக எந்த அரசியல் கட்சியும் கோரிக்கைவிட வில்லை.



அதிபர், பிரதமர் என்ற அதிகாரப் போட்டியில் வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கப்போவது அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்த சாணக்கியத்தனமா அல்லது மக்களின் புரட்சியா என்பதுதான் தற்போது இலங்கையின் முன் உள்ள மிகப்பெரிய சவால்.