இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் ராஜபக்‌ஷே குடும்பத்தினர் தான் என்று கூறி இலங்கை மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக ராஜபக்‌ஷே குடும்பத்தினர் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். அதிபராக கோத்தபயராஜபக்‌ஷே தொடர்ந்த நிலையில் அவரும் கடந்த வாரம் தலைமறைவானார். இதனையடுத்து பிரதமர் மற்றும் அதிபரின் வீடுகளை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.


அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துவிட்டதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து, இலங்கையில் இருந்து தப்பிய கோத்தபய ராஜபக்‌ஷே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ளார். அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்‌ஷே விலகியதையடுத்து பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே வெளியேறிவிட்ட நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டக்காரர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






இதனையடுத்து, ரணில் விக்கிரமசிங்கே நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ள பிரதமரின் செய்திதொடர்பு செயலாளர் தினோக் கொலம்பகே இந்த அவசர நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகக் கூறியுள்ளார்.






அதிபர் ராஜபக்‌ஷே ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடாமலேயே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். சபாயகரும், இலங்கை மக்களும் அவரது ராஜினாமா கடிதத்தை முறைப்படி அனுப்புவார் என்று எதிர்பார்த்தார்கள். அதனால் அடுத்த வாரத்திற்குள் இலங்கையின் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த அதிபர் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். சஜித் பிரேமதஸாவும் இதையே கூறியுள்ளார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நாட்டில் அதிபர் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. நாட்டின் அரசியலமைப்புப் படி வரும் 2024-இல் தான் நடைபெறும் என்று எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  பாட்டாளி சம்பிகாரனவகா கூறியுள்ளார்.