பொருளாதாரம் மற்றும் அரசியல்ரீதியாக உச்சக்கட்ட குழப்பத்தை சந்தித்து வரும் இலங்கையில், புதிய அரசு அமைப்பது குறித்த நகர்வுகள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன.
மக்களின் கோபத்திற்குப் பயந்து, நாட்டை விட்டு இரவோடு இரவாக தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, தற்போது அதிகாரப்பூர்வமாக தமது ராஜினாமாவை கொடுத்துவிட்டார். சிங்கப்பூரில் தற்சமயத்திற்கு தங்கியுள்ள அவர், அங்கிருந்து எங்குச் செல்லப்போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக தற்போது உள்ளது.
இந்தச் சூழலில், தற்போது பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால அதிபராக பதவியேற்கிறார். அதன்பின் அவருடைய உத்தரவின்படி, அதிபரைத் தேர்வு செய்யம்பணி தொடங்கும்.
அதன் அடிப்படையில், வரும் 19-ம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்படவுள்ளதாகவும், 20-ம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள சூழலில், ரணில் விக்கிரமசிங்க, நிச்சயமாக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அவருக்குப் பெரும்பான்மை எம்பி-க்களைப் பெற்றுள்ள ராஜபக்ச-வின் SLPP கட்சி ஆதரவளிக்கும் எனத்தெரிகிறது. அவருக்குப் போட்டியாக, யார் களமிறங்கினாலும், அவர்களுக்குப் போதிய ஆதரவு இருக்காது என்பதால், யாரும் களமிறங்க வாய்ப்பு இருக்காது என இலங்கையின் அரசியன் நோக்கர்களில் ஒருவரான வினயன் சுஜீனன் ஏபிபி நாடு-விடம் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதியாக ரணில் தேர்வானால், அதன்பின் அவர், தம்முடைய அரசாங்கத்தை அமைப்பார். இந்த அரசாங்கம், சர்வகட்சி அரசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குதான் பிரதமராக யாரைத்தேர்வு செய்வது என்பது பெரும் சவலாகா இருக்கும். ஆனால், தற்போது மக்கள் எழுச்சி ஆகியவற்றை அமைதிப்படுத்த வேண்டும் என்றால், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமித்தால் மட்டுமே முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப, பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா கட்சியின்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜீத் பிரேமதாசாவை பிரதமராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதை, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திச அட்டநாயக உறுதி செய்துள்ளார். சஜித் பிரேமதாசாவை பிரதமராக்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபக்சவை எதிர்த்து களமிறங்கி தோற்றுப் போன சஜித் பிரேமதாச, தற்போது பிரதமராக பதவியேற்றாலும், சில சீர்திருத்தங்கள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், அதிபரின் அதிகாரங்களைக் குறைப்பது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். இதற்கு, தற்போது இடைக்கால அதிபராக இருக்கும் ரணீல் விக்கிரமசிங்க ஒப்புக் கொண்டால், பிரதமராக சஜித் பதவியேற்பது உறுதியாகும் எனத் தெரிகிறது.
பொதுவாகவே, அரசியல் ரீதியாக சஜீத்துக்கும் ரணிலுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், சஜித்தை, ரணில் விரும்பாவிட்டால், முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவையோ அல்லது ஜேவிபி-யின் அனுரகுமார திசநாயகவையோ பிரதமராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர் வினயன் தெரிவிக்கிறார்.
தற்போதுள்ள சூழலில், சர்வ கட்சி அரசாங்கம் அமைய இருப்பதால், அதை அரவணைத்துக் கூட்டிச்செல்வது என்பது யார் பிரதமராக பதவியேற்றாலும் பெரும் சவாலாக இருக்கும் என இலங்கை அரசியல் நோக்கர் வினயன் சுஜீனன் ஏபிபி நாடு-விடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, பெரும்பாடு பட்டு ஆட்சியைப் பிடித்த ராஜபக்ச-களின் கட்சியான SLPP எனும் ச்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியோ, ரணில் அதிபாரக வந்தால் மட்டுமே தங்களுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கருதுவதால், தங்களது பெரும்பான்மையை வைத்து, அவரை அதிபராக்குவது உறுதி என கருதப்படுகிறது. ஆனால், பிரதமராக சஜித்தை கொண்டு வர வேண்டுமா என்பது குறித்தும் அக் கட்சியினர் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.
மக்கள் எழுச்சிக்கு பயந்து அமைதியாக ஒடுங்கி இருக்கும் மகிந்த ராஜபக்சவும் தப்பியோடி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும் பின்னணியில் இருந்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. சஜித்திற்கு பதிலாக, ஏற்கெனவே அதிபராக இருந்த சிறிசேனாவை பிரதராக கொண்டு வரலாமா என்ற யோசனையும் இருக்கிறதாம்.
ஜேவிபி-யின் திசநாயக போன்றோரின் பெயரும் பிரதமருக்கு அடிபட்டாலும், போதிய எம்பி-க்கள் இல்லாததால், அவருக்கு வாய்ப்பு கடினம் எனக் கூறப்படுகிறது.
இலங்கை அரசியல் நோக்கர் வினயன் சுஜீனன் ஏபிபி நாடு-விடம் பேசும் போது, அதிபராக ரணிலும் பிரதமராக சஜித் பிரேமாதாசவும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்டார்.
அதிபர், பிரதமர் ஆகியோர் பதவியேற்புக்குப்பிறகு, நாடாளுமன்ற அனைத்துக்கட்சிகள் இணைந்து சர்வ கட்சி அமைச்சரவை பதவியேற்கும். இந்த அரசாங்கம்தான், அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், எந்த அரசாங்கம் அமைந்தாலும், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பது என்பது மிக, மிக கடினம். அதற்கு பெரும் காலம் ஆகும். ஆனால், மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில், சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, அரசு மீது மக்கள் நம்பிக்கை பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.