இலங்கையில் உள்நாட்டு கலவரத்தால் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறி சிங்கப்பூர் தப்பி சென்றததாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே தப்பியதற்கு தமிழர் ஒருவர்தான் உதவி செய்ததாக இலங்கை இணையதளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. 


இலங்கை கஜானாவில் அமெரிக்க டாலர்கள் குறைவடைந்து வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே இலங்கை பெரும் நெருக்கடி நிலைக்குச் செல்லும் என்று அந்நாட்டு உளவுத்துறை, ராஜபக்சே சகோதரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும், கோத்தபய உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேரிடும் என்றும், அந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.


முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் மகிந்த ராஜபக்சே தனியார் ஜெட் விமானம் மூலமாக திருப்பதி சென்றார். அந்த விமானத்தில் அவர் குடும்ப உறுப்பினர்கள் தங்க நகைகள், மற்றும் பெரும் அளவிலான பணத்தை எடுத்துச் சென்றதாக அந்த இலங்கை இணையதளம் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 


இலங்கையில் 2021 இருந்து ஏலக்காய், கிராம்பு போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த சரவணன் என்ற தமிழர், ராஜபக்சே குடும்பத்தோடும் மிக மிக நெருக்கமாக இருந்துள்ளார். சமீபத்தில் அவரே இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய நாட்டை விட்டு தப்பிக்க, தனியார் ஜெட் விமானத்தை கொழும்பு அனுப்பியதாக அந்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த விமானத்தில் கோத்தபய ஏற, அந்நாட்டு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதால் பின்னர் அவர் ராணுவ விமானம் ஒன்றில் ஏறி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்பட்டு வருகிறது. 


முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி, உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் முதலில் மார்ச் 31ஆம் தேதி வீதியில் இறங்கி முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.


தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை ஆக்கிரமித்தனர். ஜூலை 9 ஆம் தேதி அன்று கொழும்பில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லம், அவரது அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் இல்லம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 


இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் தலைமறைவாக இருந்தார். இறுதியாக ஜூலை 14 ம் தேதி ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து, மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண