இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க கூடாது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.


அதிபர் ரணில் விக்ரமசிங்கவை குறிப்பிட்டு பேசிய அவர், தற்போது நியமிக்கப்பட்டுள்ள சர்வாதிகாரிக்கு ஜனநாயகத்தை அடக்கி ஆளும் , வன்முறை ஆட்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது என கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.இலங்கையில் அரச வன்முறை தீவிரமாக காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் செயலகத்தின் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த (கோட்டா கோ கம), பொதுமக்களை நள்ளிரவில் ராணுவத்தினரை வைத்து தாக்குதல் நடத்தி வெளியேற்றியது தொடர்பாக அதிபர் ரணில் மீது , நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் சர்வதேச தலைவர்களும் குற்றஞ்சாட்டி இருந்தனர்.


 இந்நிலையில் மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி வேண்டாம் எனவே மக்கள் கூறிவந்த நிலையில், அவர் திடீரென வன்முறையை கையில் எடுத்ததால் அவர் மீதான வெறுப்பு இன்னும் மக்களிடம் அதிகமாகி இருக்கிறதே தவிர தணிந்ததாக தெரியவில்லை.


 




இலங்கையில் அரச  வன்முறைகளை கட்டவிழ்த்து விட சர்வாதிகார ஆட்சிக்கு  வழிவிடக்கூடாது எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தி இருக்கிறார்இலங்கையில் என்னதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், மக்கள் எதிர்பார்த்த புதியதொரு பயணத்திற்கு பதிலாக, பழைய வன்முறை நிலைமையே தற்போதும் நடைமுறையில் இருப்பதாக சுட்டி காட்டியுள்ளார்.


கடந்த மே மாதம் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் ,அதன் பின்னர் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அதிபர் நாட்டை விட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, இதனை அடுத்து நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் விடிவு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து இருந்ததாகவும் ஆனால் அது இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது வரை மக்கள் எதிர்பார்த்த அந்த புதிய ஜனநாயக கட்டமைப்பு இலங்கையில் உருவாகவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.


நாட்டில் 69 லட்சம் பெரும்பான்மை வாக்கு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அதிபருக்கே இந்த நிலைமை என்றால்,இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தன்னிச்சையாக சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.


புதிய ஆட்சியில் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருக்கிறார்.




மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை சரி செய்வதற்கு மக்கள் வைத்துள்ள ஆலோசனைகளை பெறுவதற்கு தேசிய சபை ஒன்றை ஏற்படுத்தி எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்திருக்கிறது.


இந்த தேசிய சபையினூடாக மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து அவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.


மக்களால் முன்வைக்கப்படும் நாட்டுப் பிரச்சனைக்கான சிறந்த தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும், அதனூடாக மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.