கடந்த 1948ஆம் ஆண்டு, சுதந்திரம் பெற்றதிலிருந்து மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை தவித்த வந்தது. அத்தியாவசிய பொருள்களின் விலை உச்சத்தை தொட்ட நிலையில், அங்கு மக்கள் போராட்டம் வெடித்தது. இதன் விளைவாக, அதிபராக பதவி வகித்த கோட்டபய ராஜபக்ச, நாட்டை விட்டே வெளியேறினார்.
இதை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபராக பதவியேற்றார். மக்கள் போராட்டம் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நாட்டை விட்டு வெளியேறிய கோட்டபயவும் இலங்கைக்கு திரும்பினார்.
இந்நிலையில், நிதி நெருக்கடியில் சந்தித்து வரும் இலங்கையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலக நிதி அமைப்புகளிடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி பெற்று பொருளாதாரத்தை சீர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதிபராக ரணில் பதவியேற்றதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். இலங்கை வங்கி கடனை சீரமைப்பதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும் உதவும் நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நிதியத்திடமிருந்து உதவி தொகை பெற இலங்கை முயற்சித்து வரும் நிலையில், நிதிநிலை அறிக்கை அவர்கள் விதித்த நிபந்தனைகளின் கீழ் தாக்கல் செய்யப்படுமா என்பது கேள்வியாக உள்ளது.
இதுகுறித்து இலங்கை நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் இதுவாகும். 70% க்கும் அதிகமான குடும்பங்கள் அரசாங்கத்திடம் ஆதரவைக் கேட்கின்றன.
மேலும். இந்த ஆண்டு பொருளாதாரம் 8.3% சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நாட்டுக்கு அரசியல் மற்றும் பொருளாதார பாதையை முன்வைக்கும்" என்றார்.
இலங்கை பொருளாதாரம், இந்த ஆண்டு 9.2% ஆகவும் 2023 இல் 4.2% ஆகவும் சுருங்கும் என உலக வங்கி கணித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, சுற்றுச்சூழல் துறையில் பெரிய வருவாய் இழப்பு இலங்கைக்கு ஏற்பட்டது. இதற்கு மத்தியில், 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வரி குறைப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியது.
கடந்த பல ஆண்டுகால மோசமான பொருளாதார மேலாண்மை காரணமாக அந்நிய செலாவணி இன்றி இலங்கையில் சிக்கலுக்கு உள்ளானது. முக்கியமான இறக்குமதிகளுக்கு கூட பணம் செலுத்த முடியாமல், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இலங்கை போராடியது.
நிறுவனங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியிலும் தனிநபர் மற்றும் பெருநிறுவன வருமான வரி விகிதத்தை 24% இல் இருந்து 30% ஆக அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்க வரி வரம்புகளை மாற்றவும் அரசு முன்மொழிந்துள்ளது.