இணையத்தில் நம்மை வெகுவாக ஈர்த்து லைக்ஸ் அள்ள குழந்தைகளும் விலங்குகளும் பொதுவாக தவறுவதேயில்லை.


மனிதர்களைப் போல் எந்தவித ஆர்ப்பாட்டங்களும் மெனக்கெடல்களும் இன்றி தங்கள் இயல்பால், சின்ன சின்ன க்யூட்டான சைகைகளால் குழந்தைகளும் வளர்ப்புப்பிராணிகளும் நெட்டிசன்களின் இதயங்களை அள்ளிவிடுகின்றனர்.


அந்த வகையில் முன்னதாக குழந்தையாகவும் அதே சமயம் வளர்ப்புப் பிராணியாகவும் வலம் வரும் குட்டிக் குரங்கு ஒன்று புல்வெளியில் வாத்துக்கூட்டத்துடன் குழந்தையைப் போல் சுற்றித்திரிந்து விளையாடி மகிழும் க்யூட் வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


எந்தக் கவலையும் இன்றி மகிழ்ச்சியுடன் ஒரு விடுமுறை நாளைக் கழிப்பதுபோல் வாத்துக்கூட்டத்துடன் சுற்றி ஓடி, ஆடி தூங்கி மகிழும் இந்தக் குட்டிக் குரங்கின் வீடியோ நம் குழந்தைப் பருவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.


 






“குழந்தையின் புன்னைகை தான் இந்த உலகில் விலைமதிப்பற்றது. அனைவருக்கும் குழந்தைகள் தின  வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது.


முன்னதாக இதே போல் உத்தரப்பிரதேசம், ரேபரேலியில் உள்ள அச்சல்கஞ்ச் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகளுக்குள் புகுந்து, பீர் பாட்டிலை குரங்கு திருடிச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்தக் குரங்கு ஏற்கெனவே இதேபோல் கடைக்கு வந்த மதுப்பிரியர்களிடம் இருந்து பாட்டில்களைத் திருடி உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.


 






வீடியோவில், கேனை திருடிச் செல்லும் குரங்கு ஒரு ஓரத்தில் அமர்ந்து ஒரு தேர்ந்த மதுப்பிரியர் போல் மது அருந்தும் நிலையில், குரங்கு மது குடிப்பது இது முதல் முறையாக இருக்காது, இந்தக் குரங்கு மதுவுக்கு அடிமையாகி இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.


இந்தக் குரங்கு குறித்து கவலை தெரிவித்துள்ள கடைக்காரர், குரங்கை விரட்டினால் அது  கடித்துக் குதற வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி வன அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பிற மதுபானக் கடைக்காரர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.


இந்நிலையில், வனத்துறையினரின் உதவியுடன் இந்தக் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.