கொரோனா பெருந்தொற்று உலகையே இரண்டு ஆண்டுகளாக தலைகீழாக புரட்டிபோட்டது. கொரோனா முதலாம் அலை, இரண்டாம் அலை என பெருந்தொற்றால் சிக்கி மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளில் உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த முக்கிய காரணியாக இருந்தது கொரோனா தடுப்பூசி.


ஸ்புட்னிக் தடுப்பூசி:


அந்த வகையில், அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு வழங்கியது. அதேபோன்று, ரஷியா தயாரித்த தடுப்பூசிதான் ஸ்புட்னிக்.


அந்த தடுப்பூசி கண்டுபிடிப்பின் பின்னணியில் முக்கிய காரணியாக இருந்தவர் ரஷியா விஞ்ஞானி ஆண்ட்ரி போடிகோவ். இவர், பெல்ட்டால் கழுத்தை நெரிக்கப்பட்டு மர்மமான முறையில் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மர்மமான முறையில் கொலை:


இதுகுறித்து ரஷியா ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கமலேயா தேசிய சுற்றுச்சூழல் மற்றும் கணித ஆராய்ச்சி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய 47 வயதான போடிகோவ், நேற்று முன்தினம் அவரது குடியிருப்பில் இறந்து கிடந்ததாக ரஷிய விசாரணைக் குழு தகவல் வெளியிட்டுள்ளது.


2021ஆம் ஆண்டில் கரோனா தடுப்பூசியில் அவர் ஆற்றி பங்குக்காக வைராலஜிஸ்ட் ஆர்டர் ஆஃப் மெரிட் ஃபார் த ஃபாதர்லேண்ட் என்ற விருதை ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அவருக்கு வழங்கினார். 2020ஆம் ஆண்டில் ஸ்புட்னிக் V தடுப்பூசியை உருவாக்கிய 18 விஞ்ஞானிகளில் போடிகோவும் ஒருவர்.


விசாரணையில் திடுக்கிடும் தகவல்:


அவரது மரணத்தை கொலை என்ற கோணத்தில் ரஷியா விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த விசாரணை அதிகாரிகள் கூறுகையில், 29 வயது இளைஞன் ஒருவர், வாக்குவாதத்தின் போது போடிகோவை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 


இந்த கொலை குடும்ப பிரச்னை காரணமாக நிகழ்ந்த குற்றமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போடிகோவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.


இதுகுறித்து விசாரணை கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், "தாக்குதல் நடத்தியவரின் இருப்பிடம் குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடுமையான குற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டாக். அவர் மீது முன்பே குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது"


இதையும் படிக்க: Pakistan Economic Crisis: இலங்கையாக உருவெடுக்கும் பாகிஸ்தான்... ராணுவ வீரர்களுக்கே உணவு தட்டுப்பாடு....பரிதாப நிலையில் மக்கள்...!