ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ அவரது உடல்நலனை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், சமீபத்தில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் க்ரெம்லினில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் புடின் கலந்துகொண்ட போது, அவர் நிற்பதற்கு சிரமப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. எனினும் இதன் உண்மைத்தன்மை குறித்து உறுதிசெய்யப்படவில்லை. 


ரஷ்யத் திரைப்பட இயக்குநர் நிகிதா மிகைலோவுக்கு ரஷ்யக் கூட்டமைப்பின் அரசு விருது வழங்கும் போது புடின் முன்னுக்கும் பின்னுக்குமாக அசைவதும், மேடையின் பக்கம் நிற்கும் போது அவரது கால்கள் நடுங்குவதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 


தனது நிலையற்ற உடல்நிலை காரணமாக பொது நிகழ்ச்சிகளில் நீண்ட நேரம் கலந்துகொள்ளக் கூடாது என புடினின் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. 



சர்வதேச அளவில் ரஷ்ய அதிபர் புடினின் உடல்நலன் குறித்த தகவல்கள் கவனத்துடன் பார்க்கப்படுகின்றன. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியவுடன், அவரது உடல்நலம் கடுமையாக மோசமடைந்துள்ளதாகத் தகவல்கள் எழுந்துள்ளன. மேலும், ரஷ்ய அதிபர் புடின் வெளிநாடு சென்றால் அவரது கழிவுகளைச் சேகரித்து மாஸ்கோவில் அவற்றைக் கொட்டும் பொறுப்புடன் தனியாக ஒருவரை அவருக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது கழிவுகள் வெளிநாடுகளில் பிறருக்குக் கிடைத்தால் அவரது உடல்நலன் குறித்த தகவல்களைப் பெற முடியும் என்பதால் இவ்வாறு செய்வதாகக் கூறப்படுகிறது. 






ரஷ்ய அதிபர் புடினுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாகக் கடந்த மாதம் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ரஷ்ய அதிபர் புடினுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழ்வதற்கான கால அவகாசம் இருக்கிறது எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், கடந்த மே மாதம் ரஷ்யாவின் வெற்றி தினக் கொண்டாட்ட அணிவகுப்பின் போது, புடின் இருமிக் கொண்டிருப்பதும், தன் மீது போர்வை போர்த்தியிருப்பதுமான படங்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரஷ்ய அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக ரஷ்ய அதிபர் புடினின் உடல்நலம் குறித்து வெளியான அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளது.