வரும் ஜூலை 13 முதல் 16 வரை மேற்கு ஆசியப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகத் திட்டமிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னெட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோருடன் ஆன்லைன் மூலமாக விர்ச்சுவல் மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
`I2U2' என்று அழைக்கப்படும் இந்தக் குழு புதிதாக உருவாக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் I என்பது இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளையும், U என்பது அமெரிக்கா (யு.எஸ்.ஏ), அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) ஆகிய நாடுகளையும் குறிக்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு, இதே நான்கு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் நாட்டில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். `பொருளாதாரக் கூட்டுறவுக்கான சர்வதேச மன்றம்’ என்று அது அழைக்கப்பட்டது. தற்போது நான்கு நாடுகளின் அரசுகளின் உயர்ந்த பதவிகளில் இருக்கும் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இஸ்ரேல், பாலஸ்தீன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதைக் குறித்து பேசிய அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர், `இந்தப் பயணத்த்தின் மூலமாக ஆபிரஹாம் அக்கார்ட்ஸ் என்ற உடன்படிக்கை மூலமாக இஸ்ரேல், அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்படுத்தப்படும்.. புதிதாக இஸ்ரேல், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து I2U2 என்ற அமைப்பு உருவாக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், `நமது பங்குதாரர்களை மேம்படுத்துவதற்கும், அவர்களிடையே இணைந்து பணியாற்றுவதற்கும் இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியமாக இருப்பதாக கருதுகிறோம். இதன்மூலமாக இஸ்ரேல் நாடு அமைதியான முறையில் இருப்பதுடன், நீண்ட காலத்திற்கு அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கடந்த மாதம், அமெரிக்க அரசுச் செயலாளர் ப்ளிங்கென் தெற்கு இஸ்ரேலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொரோக்கோ, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளின் தூதர்களுடன் சந்தித்துப் பேசியுள்ளார்.. மத்திய கிழக்குப் பகுதியையும் கடந்த இந்த முன்னெடுப்புகள் பரவ வேண்டும் என்பதற்காக அமெரிக்க அதிபர் I2U2 நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்’ எனக் கூறியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபரில் சந்தித்த போது, I2U2 நாடுகள் கடற்படை பாதுகாப்பு, கட்டமைப்பு, டிஜிட்டல் கட்டமைப்பு, போக்குவரத்து முதலான விவகாரங்களில் கவனம் செலுத்தியிருந்தனர். மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல், ஜோ பைடனின் அரசு பல்வேறு நாடுகளைக் கூட்டணிகளாக்கி வெவ்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.