பொதுவாக பண்டிகை நாட்கள் என்றால் அரசு ஊழியர்களுக்கு அரசு போனஸ் அறிவிக்கும். அதேபோல் தனியார் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் முடிவு எடுத்து போனஸ் அறிவிக்கும். அதேசமயம் ஒரு ஊழியர் சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு அந்த நிறுவனம் சார்பில் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஒரு நிறுவனம் சிறப்பாக செயல்பட்டதற்காக அந்த நிறுவனத்தின் சிஇஒ அனைத்து ஊழியர்களுக்கும் பரிசை அறிவித்துள்ளார். அது என்ன பரிசு? யார் அந்த சிஇஒ? அவருடைய பரிசு வைரலாக காரணம் என்ன?


அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் 1998ஆம் ஆண்டு ஸ்பான்ஸ் என்ற உள்ளாடை,பெண்கள் ஆடை தொடர்பான ஒரு நிறுவனத்தை சிறிய முதலீட்டு உடன் சாரா பளாகலி தொடங்கியுள்ளார். இது அங்குள்ள அட்லாண்டா இடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளது. அவர் தன்னுடைய நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பாக வீடு வீடாக சென்று ஃபெக்ஸ் கருவியை விற்று அதன்மூலம் வரும் வருவாயை சேர்த்துள்ளார். வெறும் 5000 டாலர் முதலீட்டை வைத்து அவர் ஒரு தொழிலை தொடங்கியுள்ளார். பின்பு தன்னுடைய உழைப்பால் எந்தவித முதலீடுகளையும் பெறாமல் தன்னுடைய வருவாயை வைத்து இவர் தன்னுடைய தொழிலை பெருக்கியுள்ளார். 




இந்தத் தொழில் தொடங்கி கிட்டதட்ட 23ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் முறையாக தன்னுடைய நிறுவனத்தின் பங்குகளை ப்ளாக்ஸ்டோன் என்ற முதலீட்டு நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் டாலருக்கு விற்றுள்ளார். இந்தப் பணத்தை எப்போதும் போல் தன்னுடைய தொழிலில் முதலீடு செய்யாமல் தன்னுடைய ஊழியர்களுக்கு பகிர்ந்து அளிக்க முடிவு செய்துள்ளார். அதனால் தன்னுடைய நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்துள்ளார். அந்த விருந்தில் ஊழியர்கள் 500க்கும் மேற்பட்ட அனைவரையும்  கலந்து கொள்ள வைத்துள்ளார். 


அப்போது அவர் ஊழியர்களுடன் ஆடி  பாடி மகிழ்ந்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு ஒரு ஆனந்தமான விஷயத்தையும் அறிவித்துள்ளார். முதலில் தன்னுடைய ஊழியர்கள் அனைவருக்கும் தலா 2 முதல் தர வகுப்பு விமான பயணச்சீட்டை அறிவித்தார். அந்தப் பயணச் சீட்டை வைத்து அவர்கள் அமெரிக்காவில் இருந்து எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அதுவே அவருடைய ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


 






அதைத் தொடர்ந்து  மேலும் ஒரு அறிவிப்பை செய்து தன்னுடைய ஊழியர்களை வாய் அடைக்க செய்துள்ளார். அதாவது இந்த ஊழியர்கள் பயணம் செய்ய டிக்கெட் மட்டும் கொடுத்தால் போதாது அதற்கு செலவு செய்ய அவர்களுக்கு பணமும் கொடுத்துள்ளார். அதாவது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் சுமார் 7.5 லட்சம் ரூபாயை பரிசாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அவருடைய ஊழியர்களின் மத்தியில் உலகத்தின் சிறந்த  சி இஒ வாக மாற்றியுள்ளது. ஒரே நாளில் இவருடைய அறிவிப்பு பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: எதிர்கால ஆபத்து இதுதான்... உலகுக்கு வலசை பறவைகள் கொடுக்கும் பகீர் எச்சரிக்கை!