ஸ்பெயின் நாட்டின் தொல்பொருள் ஆய்வுக் குழு ஒன்று எகிப்து நாட்டில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் தோண்டி கிடைக்கப்பட்டுள்ளன. எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள சுற்றுலா மற்றும் பழங்காலப் பொருள்கள் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சுமார் கி.மு 664 முதல் கி.மு 525 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த சையிட் வம்சத்தினரின் காலத்தைச் சேர்ந்த இரு கல்லறைகள் அருகருகே கிடைத்துள்ளன. மேற்கு எகிப்தில் உள்ள மின்யா மாநிலத்தில் இந்தத் தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.  


எகிப்து நாட்டின் பழங்காலப் பொருள்களின் உச்சபட்சக் குழுவின் பொதுச் செயலாளர் முஸ்தபா வசிரி இது குறித்து கூறிய போது, `ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் அடையாளம் தெரியாத இருவரின் கல்லறைகள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒருவருக்குத் தங்க நாக்கு பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். 



சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட இந்தக் கல்லறையின் உள்ளே ஒரு பெண்ணின் உருவத்தில் மூடி கிடைத்துள்ளதாகவும், அந்தக் கல்லறைக்கு அருகில் மற்றொரு நபரின் கல்லறையும் இருந்ததாகவும் முஸ்தபா வசிரி தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கல்லறைகள் இரண்டுமே பழங்காலத்தில் திறந்து பார்க்கப்பட்ட தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் முஸ்தபா வசிரி கூறியுள்ளார். எனினும், இரண்டாவதாக இருந்த கல்லறை முழுவதுமாக மூடப்பட்டிருந்தாகவும், தற்போது நடைபெற்ற அகழ்வாய்வின் போது முதல் முறையாகத் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பண்டைய எகிப்து நாட்டில் கல்லறைகளை மம்மிகளாக்கும் நடைமுறையின் போது வைக்கப்படும் கேனோபிக் பானைகள் இந்த இரு கல்லறைகளின் மீதும் வைக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வை மேற்பார்வையிடும் ஹசன் அமீர், இரண்டாவது கல்லறை திறக்கப்பட்ட போது, அந்தச் சுண்ணாம்புக் கல்லறையில் உள்ள மனித சடலம் முகத்துடன் இருந்ததாகவும், நல்ல விதமாகப் பதப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் ஹசன் அமீர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், `அங்கு கிடைத்த ஒரு பானையில் 402 உஷப்தி பொம்மைகள் கிடைத்துள்ளன. அவற்றுடன் சிறிய தாயத்துகளும், பச்சை நிறப் பாசி மணிகளும் கிடைத்துள்ளன’ என்று கூறியுள்ளார். 



பண்டைய எகிப்து கலாச்சாரத்தில் மக்களின் தலைவர்கள் இறந்த பிறகு அவர்கள் புதைக்கப்படும் போது, அந்த உடல்கள் பதப்படுத்தப்பட்டன. இந்த நடைமுறையின் மூலம் `மம்மி’ என்று பதப்படுத்தப்பட்ட உடல்கள் அழைக்கப்பட்டன. மேலும், பதப்படுத்தப்பட்ட இந்த உடல்கள் இறந்த பிறகான வாழ்க்கைக்கு எடுத்துச் செல்வதற்கு என அவர்களுக்கு இந்த உஷப்தி பொம்மைகள், கேனோபிக் பானைகள், தாயத்துகள், பாசி மணிகள் ஆகியவை போடப்பட்டு, கல்லறைகள் மூடப்படும். 


சமீப காலங்களில், எகிப்து நாட்டில் பெருமளவிலான அகழ்வாராய்ச்சிகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மன்னர்களின் கல்லறைகள், சிலைகள், கல்லறைகள், மம்மிகள் எனப் பல்வேறு பழங்காலப் பொருள்கள் எகிப்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.