எலான் மஸ்க்கின், உலகில் மிக சக்திவாய்ந்த ஸ்டார்ஸ்சிப் என்ற ராக்கெட்டானது, விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்த சிதறியது. இதனால், வானில் ராக்கெட் பாகங்கள் வெடித்துச் சிதறி தீ பிளம்பாக சென்ற காட்சியளித்தது. 

விண்ணில் பாய்ந்த ஸ்டார்ஸ்சிப் ராக்கெட் காட்சி:

ஸ்டார்சிப் ராக்கெட்:

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை கொண்டு செல்லும்  திட்டத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன் அடிப்படையில், இதுவரையில் நாசா உள்ளிட்ட நிறுவனங்களில் கூட இல்லாத சக்தி வாய்ந்த ஸ்டார்சிப் என்கிற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட்டை வைத்து படிப்படியாக சோதனையை மேற்கொண்டுவருகிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

அதனடிப்படையில் , இந்த திட்டத்தின் 7வது சோதனையாக நேற்றைய தினம் , பூமியின் சுற்றுப்பாதையில் பெரிய அளவிலான போலியான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியது. அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், எதிர்பாராத விதமாக தனது கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியது. 

நெருப்பு மழை

ஆனால், இரண்டு அடுக்குகளை கொண்ட ஸ்பேஸ் ராக்கெட் , மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல் பகுதியான ,  செயற்கைக்கோள்களை உந்தி தள்ளக்கூடிய பூஸ்டர் ஒரு பகுதியானது பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்பை இழந்த மற்றொரு பகுதி வெடித்துச் சிதறிய போது, வானில் தீ சாரல் மழை போல் பொழிந்த காட்சிகளை பார்க்க முடிகிறது. 

 ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் அதன் ஏழாவது சோதனைப் பயணத்தில் , விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் வெடித்ததாகவும், இந்த விபத்தினால் மெக்சிகோ வளைகுடா கடற்பகுதியில் பயணிக்கும் விமானங்கள், ராக்கெட் உதிரிபாகங்கள் விழுவதைத் தவிர்ப்பதற்காக, அதன்  பாதையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இது எலான் மஸ்க்கின் ராக்கெட் திட்டத்திற்கும் சற்று பின்னடைவாக அமைந்துள்ளது.

கூலாக பதிலளித்த மஸ்க்:

இந்த நிகழ்வு குறித்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது சமூக ஊடக தளமான X இல் தெரிவித்ததாவது, “ என்ன தவறு நடந்தது என்பதை ஸ்பேஸ்எக்ஸ்  நிறுவனம் ஆராய்ச்சி செய்யும், அதே வேளையில், ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடிப்பிற்கு ஆக்சிஜன் கசிவு காரணம் இருக்கலாம் என ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன. வெற்றி நிச்சயமற்றது, ஆனால்  எண்டெர்டெயிண்மண்ட்டுக்கு கேரண்டி என கூலான பதிலளித்துள்ளார் எலான் மஸ்க்