பாலியல் குற்றச்சாட்டு..


ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீது பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்டது உண்மையில்லை என எலானுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் க்வைன் ஷாட்வெல் (SpaceX President Gwynne Shotwell). 


எலான் மஸ்க்கிற்கு எதிராக பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வன்முறை புகார் எழுந்துள்ளது. மேலும், 2018- இல்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண் உண்மையை வெளியில் சொல்லாமல் இருக்கவும், எலான் மஸ்க் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவும் 2,50,000 டாலர்கள் கொடுத்திருப்பதாக பிரபல தொழில்நுட்ப பத்திரிகையான பிசினஸ் இன்சைடரின்  ரிப்போர்ட் ஒன்று கடந்த வாரம் வெளியாகி இருந்தது. இந்தப் புகாரை எலான் மஸ்க் மறுத்துள்ளார்.தன் மீதனா மதிப்பையும் நற்பெயரையும் கெடுப்பதற்காக ஜனநாயக கட்சி செய்யும் வேலைகள் இவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.


ஆதரவு குரல்..


இந்நிலையில், எலான் மஸ்கிற்கு ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் க்வைன் ஷாட்வெல். 


அவர் எலான் மஸ்க் மீது முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து இ-மெயில் வழி கடிதத்தில் கூறியிருப்பதாக அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், 


“எலான் மஸ்க் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நான் நம்புகிறேன். நான் எலான் மஸ்க்-இன் நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறேன் என்பதற்காக சொல்லவில்லை. அவருடனான என் பயணம் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலானது. அவரை பற்றி எனக்குத் தெரியும். அவர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்படும் அளவிற்கு எலான் நடந்து கொண்டதாகவோ, அப்படிப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதாகாவோ எந்த செய்தியையும் நான் அறிந்ததில்லை.” என்று க்வைன் ஷாட்வெல் இ-மெயில் மூலம் அலுவலக பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளாக சின்.என்.பி.சி.-யின் செய்தி கூறுகிறது. 


எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பிறகு டெஸ்லாவின் பங்குகள் 66 பில்லியன் டாலர் அளவு சரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


என்ன நடந்தது? 


கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. மஸ்க் பயன்படுத்திய தனி விமானம் கலிபோர்னியாவில் இருந்து கிளம்பி இருக்கிறது. இந்த விமானத்தில் பெண் ஒருவரிடம் எலான் மஸ்க் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் கொடுத்த புகாரின் படி, எலான் மஸ்க் அந்த பெண்ணை தனியாக அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணுக்கு முன் தன்னுடைய உடைகளை கழற்றி இருக்கிறார். மசாஜ் செய்யுமாறும் அதற்காக குதிரை வாங்கி தருவதாக சொன்னதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது


இந்த நிலையில் அந்த பெண் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் இதை பற்றி புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் தோழி ஒருவர் இந்த சம்பவம் உண்மை என்றும் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 2,50,000 டாலர்கள் அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


மறுப்பு..


இந்த செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, "நான் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒருபகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.  ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது. எழுதி வைத்துகொள்ளுங்கள். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை.", என்று கூறியுள்ளார்.