தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்தவர்களில் ஒருவரான 'பேராயர் டெஸ்மண்ட் டுட்டு' இன்று உயரிழந்தார். அவருக்கு, வயது 90.
டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பில்; ‘’ எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு, உலகம் முழுவதும் எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தவர். மனித கண்ணியம் மற்றும் சமத்துவத்துக்கான அவரது வலியுறுத்தல் என்னென்றும் நினைவில் கொள்ளத்தக்கது.. அவரது மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.’’ என்று பதிவிட்டார்.
தமிழ்நாடு முதல்வர், மு.க ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், " தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும்; உள்நாட்டுப் போரின்போது அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசிற்கு எதிராக 2013ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை உலகத் தலைவர்கள் புறக்கணிக்க வேண்டும் என வெளிப்படையாகத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியவரும்; மனித உரிமைச் செயல்பாடுகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறவெறி - இனவெறிக்கு எதிராக அவர் நடத்திய அறப்போர், வன்முறையால் சிக்குண்டுத் தவிக்கும் உலகிற்கு வழிகாட்டட்டும்!" என்று பதிவிட்டார்.
அமைதிக்கான நோபல் பரிசு: எய்ட்ஸ், காசநோய், தற்பாலினர் வெறுப்பு, திருநங்கை இனத்தினர், வறுமை மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றில் தீவிரப்பணி ஆற்றியாவர். 1984ஆம் ஆண்டு டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 2005ஆம் ஆண்டில் காந்தி அமைதிப் பரிசையும் பெற்றார் 2009ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்