ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் உபயோகிக்க அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
சமூக வலைத்தளங்களின் கிடுகிடு வளர்ச்சி
சமூக வலைத்தளங்களின் பங்கு இன்றைய காலக்கட்டத்தில் சமூகத்தின் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டது. பிறந்த குழந்தைகள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை பலரும் சமூக வலைத்தளங்களில் அக்கவுன்ட் வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் சமூகத்தின் பிரபலமாக தெரிய வேண்டும் என பெற்றோர்கள் சமூக வலைத்தள கணக்குகளை தொடங்கி அதனை ஆக்டிவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இத்தகைய சமூக வலைத்தளங்கள் எப்படி பிளஸ் ஆக பார்க்கப்படுகிறதோ, அதே அளவுக்கு மைனஸாகவும் உள்ளது.
சமூக வலைத்தளங்கள் தகவல் தொடர்பை வளர்க்க, அறிவை பெருக்க, பணம் சம்பாதிக்க பயன்படுவதால் பலரும் நேரம், காலம் பார்க்காமல் இதில் மூழ்கி கிடக்கின்றனர். இதனால் சில நாடுகள் குழந்தைகள் சமூக வலைத்தள பக்கங்கள் உபயோகிக்க தடை விதித்துள்ளது. அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
ஏன் இந்த முடிவு?
அந்நாட்டு அரசாங்கத்தின் ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான E-Safety நடத்திய ஆய்வில், ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 16 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர். இதில் 13 முதல் 15 வயதுடையவர்கள் 4.40 லட்சம் பேர் ஸ்நாப்சாட்டிலும், 3.50 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமிலும், 1.50 லட்சம் பேர் பேஸ்புக்கிலும் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.
இந்த சட்டத்தின்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், த்ரெட், யூட்யூப், எக்ஸ், ஸ்நாப்சாட், ரெட்டிட், கிக், ட்விச் ஆகியவை பயன்படுத்த முடியாது. அதேசமயம் வாட்ஸ்அப், யூட்யூப் கிட்ஸ், பின்ட்ரெட்ஸ்ட், டிஸ்கார்ட், மெசெஞ்சர், ரோப்லக்ஸ் ஆகியவை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
இளம் வயதினர் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதால் ஒருவித மன அழுத்தம், பதட்டம் ஆகியவை அதிகரித்து வருகிறது. அதேசமயம் குழந்தைகளை குறிவைத்து சமூக வலைத்தள மோசடி நிகழலாம் என அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளால் உண்டாகலாம் என்பதால் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகத் தடை சட்ட (சமூக ஊடக குறைந்தப்பட்ச வயது) மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை பல சமூக ஊடக நிறுவனங்கள் வெளிப்படையாக எதிர்த்தது.
ஆனால் இந்த சட்டத்தை பெற்றோர்கள் வரவேற்றனர். அதன்படி டிசம்பர் 10ம் தேதி முதல் சமூக வலைத்தளங்களை 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தினார் 33 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள 10 சமூக ஊடக வலைத்தளங்களில் இருந்தும் முற்றிலுமாக தடுக்கப்படுவார்கள். அதற்கு மேற்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள கணக்கை உருவாக்க பெற்றோரின் ஒப்புதல் ஆவணங்கள் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த தடை சட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்துவதில் மிகப்பெரிய சிக்கலை ஆஸ்திரேலிய அரசு சந்திக்கும் என பலரும் கணித்துள்ளனர்.