எதிரும் புதிரும் என்று சொல்வார்களே அந்த வார்த்தைகளுக்கு ஆகச் சிறந்த பொருத்தம் வட கொரியா, தென் கொரியா என்றால் மிகையாகாது. ஒருங்கிணைந்த கொரியா இரண்டாக உடையக் காரணம் கொரியப் போர். 


கொரிய போரின் பின்னணி:


கொரிய போர் என்பது, 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி முதல் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வரை வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடம் பெற்ற போரைக் குறிக்கும். இரண்டு கொரியாக்களுமே தமது சொந்த அரசாங்கங்களின் கீழ் கொரியாவை ஒருமைப்படுத்த முயன்றன. இப் போரில் இரண்டு அரசாங்கங்களுக்குமே வெளிச் சக்திகளின் ஆதரவு இருந்தது. "கொரியப் போர்" என்பது முன்னர் குறிப்பிட்ட தீவிரமான போர்க்காலத்துக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுவது உண்டு.


கொரியா முழுமைக்குமான தேர்தல் தொடர்பாக எழுந்த பிணக்குக்குப் பின்னரும், எல்லைப் பிரச்சினை தீவிரமானதைத் தொடர்ந்தும் 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் வட கொரியப் படைகள் தென் கொரியாவை தாக்கின. பரந்த பனிப் போரின் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் கொரியாவில் தலையிட்டதனால் இப் போர் மேலும் விரிவடைந்தது. போர் முடிந்தாலும் பகைமை முடியவில்லை.


அன்றிலிருந்து வட கொரியா, தென் கொரியா இரண்டாகப் பிரிந்தது. ஒரு தாய் பிள்ளைகள் தான் என்றாலும் கூட இரு நாட்டு மக்களுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை.


திடீர் பச்சைக் கொடி:


இந்நிலையில் இனி தென் கொரியாவில் வட கொரிய செய்தித்தாள்களை விற்கலாம். வட கொரிய செய்தி சேனல்கள் ஒளிபரப்பு சேவை தரலாம் என்று அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வேற்றுமையை மறந்து ஒற்றுமையை ஏற்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததற்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. கண்டனம் ஒருபுறம் இருந்தாலும் சமாதானம் மறுபுறம் என்று இந்த நடவடிக்கையை தென் கொரியா எடுத்துள்ளது.


கடந்த 1948 ஆன் ஆண்டுக்குப் பின்னர் இரண்டு கொரிய நாடுகளும் தங்களின் எல்லை தாண்டி செல்லக் கூடாது என கடுமையான சட்டங்களை உருவாக்கின. அது மட்டுமல்ல தென் கொரிய மக்கள் வட கொரிய மக்களுடன் தொலைபேசியிலோ, இமெயில் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ பேசக்கூட கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவிட்ட இக்காலத்தில் இந்தத் தடை இணையதளங்கள், தொலைக்காட்சி சேவைகள் என்று விரிந்துள்ளது. 


இந்நிலையில் தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு இணைப்பு அமைச்சகம் சார்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. வட கொரியாவில் நீண்ட காலமாக கிம் ஜோங் உன் அதிபராக இருக்கிறார்.