PM Modi G20: ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவது மிகவும் கடினம் என சொல்லமாட்டீர்களா? என பிரதமர் மோடியை தென்னாப்ரிக்கா அதிபர் கிண்டலடித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு:
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18வது ஜி20 உச்சி மாநாட்டை டெல்லியில் இந்தியா தலைமை ஏற்று நடத்தியது. அப்போது இந்த குழுவின் நிரந்தர உறுப்பினராக தென்னாப்ரிக்கா யூனியன் இணைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜி20 உச்சி மாநாட்டை முதன்முறையாக தென்னாப்ரிக்கா நடத்தி முடித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் அதிபர் சிரில் ராம்போசா, உச்சி மாநாட்டை நடத்தி முடிப்பது என்பது எதிர்பார்த்ததை காட்டிலும் சிரமமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்திய பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தையின்போது, தென்னாப்ரிக்கா யூனியன் ஜி20 அமைப்பிற்கான தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபோது டெல்லி அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
ராம்போசா கிண்டல் பேச்சு
நிகழ்ச்சியில் பேசிய ராம்போசா, “ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு தென்னாப்ரிக்கா யூனியனிற்கு இந்தியா அளித்த ஆதரவிற்கு நன்றி. இந்த மாநாட்டை நடத்துவது கடினம் என்பதை நீங்கள் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்க வேண்டும். ஒருவேளை நாங்கள் அப்போதே ஓடியிருப்போம்” என சிரித்தபடி பேச அதனை கேட்ட பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் சிரித்துள்ளனர். தொடர்ந்து, ”இந்தியா நடத்திய ஜி20 உச்சி மாநாட்டை நாங்கள் உன்னிப்பாக கவனித்து பல விஷயங்களை கற்றுக்கொண்டோம். அது மிகவும் பிரமாதமாக இருந்தது. எங்களுடையது மிகவும் சிறியதாக இருந்தது” என ராம்போசே தெரிவித்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த பிரதமர் மோடி, “சிறியது எப்போதுமே அழகானது” என குறிப்பிட்டு தென்னாப்ரிக்காவின் பணிகளை பாராட்டியுள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு:
ஜி20 உச்சிமாநாடு என்பது உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகங்களிடையே ஆண்டு முழுவதும் நடைபெற்ற அனைத்து செயல்முறைகள் மற்றும் கூட்டங்களின் உச்சக்கட்டமாகும். சர்வதேச பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஃரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பதால் இது மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த உச்சி மாநாட்டில் சர்வதேச பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்து தீர்வு காண்பது, இணைந்து செயல்பட்டு முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.