சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பை உலகமே உற்று நோக்குகிறது. இரு நாடுகளையுமே வரிகளால் அமெரிக்கா டார்ச்சர் செய்துவரும் நிலையில், அவர்கள் என்ன பேசுவார்கள், என்ன முடிவெடுப்பார்கள் என்பது தற்போதைய முக்கியமான ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜின்பிங் மோடியிடம் கூறியது என்ன.?
அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக நாடுகளிடையே நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள சூழலில், நல்ல அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் இருப்பது அவசியம் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்கு நேற்று மாலை சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கு மோடிக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
முன்னதாக, மாநாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடியை, சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கி வரவேற்பு கொடுத்தார். அப்போது மோடியுடன் பேசிய ஜின்பிங், உலக அளவில் ஏற்பட்டுவரும் நெருக்கடி மற்றும் மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியா சீனா இடையேயான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து கூறினார்.
“மாற்றங்களை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய அளவில் நாகரீகமடைந்த நாடுகள். உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாகவு, அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளாகவும் இருக்கிறோம்“ என ஜின்பிங் கூறினார்.
அதோடு, “சிறந்த அண்டை நாடுகளாகவும், நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம், டிராகனும், யானையும் ஒன்றாக இணைய வேண்டும்“ என்றும் அவர் தெரிவித்தார்.
இதனுடன், கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த வெற்றிகரமான மாநாட்டில் பங்கேற்றது குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், இந்தியா-சீனா இடையேயான ராஜதந்திர உறவின் 75-வது ஆண்டின் நிறைவையும் ஜின்பிங் சுட்டிக்காட்டினார். மேலும், இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை நீண்ட கால கண்ணோட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்.
மோடி - ஜின்பிங் சந்திப்பில் முக்கிய முடிவு
இதனிடையே, மோடி-ஜின்பிங் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா-சினா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீன அதிபர் ஜின்பிங் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, பிரதமர் மோடி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இரு நாடுகளும், பத்திரிகையாளர்களை பரஸ்பரம் தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையெல்லாம் விட, அமெரிக்காவிற்கு எதிரான இரு தலைவர்களும் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. அது, இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.