கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2ஆவது முறைாக பதவியேற்றுள்ளார்.


கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கு அடுத்த நாளே முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவானது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்றனர்.


பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்:


அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது. 17 இடங்களில் பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் வெற்றிபெற்றது. மற்ற கட்சிகள் 17 இடங்களில் வெற்றிபெற்றனர். வேட்பாளர் இறந்ததால் ஒரு இடத்தில் தேர்தல் நடத்தபடவில்லை. 


புதிய அரசை அமைக்க 133 இடங்களில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் முயற்சித்தன. குறிப்பாக, பரம எதிரிகளாக கருதப்படும் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.


அதன்படி, பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிய பிலாவல் பூட்டோ, நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு அளித்தார். ஆனால், அரசாங்கத்தில் இணைய மாட்டோம் என தெரிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இன்று பதவியேற்று கொண்டார். 


யார் இந்த ஷெபாஸ் ஷெரீப்?


பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் எஃகு தொழிலில் ஈடுபட்டு வந்த காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்த பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் ஷெபாஸ் ஷெரீப். கடந்த 1997ஆம் ஆண்டு பஞ்சாப் முதலமைச்சராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.  வேலை என வந்துவிட்டால் நேரம் பார்க்காமல் உழைப்பவர் ஷெபாஸ் என அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அவரது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.


இளம் வயதிலேயே முதலமைச்சராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் முதல் நவீன பொது போக்குவரத்து அமைப்பு உட்பட பல உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தினார். அவரது சகோதரரான நவாஸ் ஷெரீப்,  1999இல் ராணுவ புரட்சி மூலம் பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, சவுதி அரேபியாவிற்கு நாடுகடத்தப்பட்டார் ஷெபாஸ்.