Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக அவர் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.


டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு:


ஃபுளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளயாடிக் கொண்டிருந்தபோது, வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக எஃப்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அருகாமையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. ஆனால் வதந்திகள் கட்டுப்பாட்டை மீறத் தொடங்கும் முன், இதை நீங்கள் முதலில் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன். எதுவும் என்னை மெதுவாக்காது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என தனது தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ரியான் வெஸ்லி ரூத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நடந்தது என்ன?


புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்பில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன், முன்னாள் அதிபர் டிரம்பை படுகொலை செய்ய முயற்சிப்பது போல் தெரிகிறது என எஃப்.பி.ஐ தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி சுமார் மதியம் 1:30 மணியளவில், கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் AK-47 உடன் ஒரு நபரை ரகசிய சேவை முகவர்கள் கண்டபோது இந்த சம்பவம் நடந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அதே கோல்ஃப் மைதான வளாகத்தில் உள்ள டிரம்ப்பின் பரப்புரை தலைமையகம் பூட்டப்பட்டுள்ளது. 


அதிபருக்கு தகவல்:


வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முன்னாள் அதிபர் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது,  டிரம்ப் சர்வதேச கோல்ஃப் மைதானத்தில் நடந்த பாதுகாப்பு சம்பவம் குறித்து அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு விளக்கப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து அவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் குழுவினரால் தொடர்ந்து தகவல்களை பெற்று வருகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


இரண்டாவது முறை துப்பாக்கிச் சூடு:


அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் பென்சில்வேனியாவில் தேர்தல் பேரணியில் ஈடுபட்டபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதிருஷ்டவசமாக காதில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் தான், இரண்டாவது முறையாக டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு முயற்சி நடைபெற்றுள்ளது.