பூமியையே விழுங்கும் அளவிற்கு ராட்சத கருந்துளையை ஆராய்ச்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனராம். இந்த அதிர்ச்சிதரும் கருந்துளை பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்த ராட்சத கருந்துளையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கருந்துளையை ஆங்கிலத்தில் பிளாக் ஹோல் என்று அழைக்கின்றனர்.


விவரிக்க முடியாத அற்புதத்தையும், விசித்திரமான பண்புகளையும் கொண்ட விண்வெளி குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளக்ரள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் நாசா தொடங்கி இந்தியாவின் இஸ்ரோ வரை விண்வெளி ஆராய்ச்சிக்காக பல பில்லியன் டாலர்களை செலவழிக்கிறது. ஆனாலும் கூட விண்வெளியின் சில மர்மங்கள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் இந்த கருந்துளை பற்றி ஆராய்ச்சிகள்.  


கருந்துளை என்றால் என்ன?


கருந்துளை (BLACK HOLE) என்பது மிகபெரிய அண்ட வெளியில் மற்றும் வின்வெளியில்  காணப்படும்  சக்தி வாய்ந்த கண்ணுக்கு தெரியாத  வெற்றிடமாகும்.  இந்த கருந்துளை  அதிக ஈர்ப்பு விசை கொண்டது எந்த அளவுக்கு என்றால்  இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைகூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.




இது ஒரு சூரியனையே தனக்குள் ஈர்த்து கொள்ளும்  அளவிற்கு சக்தி வாய்ந்தது.  இந்த கருந்துளையானது அதனுள் சென்ற   சிறிய ஒளியை கூட வெளிய வர விடாது அந்த அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்தது. நமது பால்வெளியின் அருகில் உள்ள ஒரு கருந்துளை நமது சூரியனை விட 40 லட்ச  மடங்கு பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.  இந்த கருந்துளை ஒவ்வொரு பால்வெளி அண்டத்திலும் காணப்படும். இந்த கருந்துளை பற்றிய அனைத்து கருத்துகளும் அதனை சுற்றியுள்ள பொருள்களை வைத்தே வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை கருந்துளைக்குள் எவரும் சென்றதில்லை. 


கருந்துளை வளர்ச்சியும் ஆராய்ச்சியும்:


தற்போது ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (Australian National University) வானியலாளர்கள் தலைமையிலான சர்வதேச குழுவால் ஒரு கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கருந்துளை கடந்த 9 பில்லியன் ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது விண்மீன் மண்டலத்திலிருந்து வரும் அனைத்து ஒளியையும் விட 7,000 மடங்கு இந்த கருந்துளை பிரகாசமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இது குறித்து மூத்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் கிறிஸ்டோபர் ஓன்கென் மற்றும் குழுவை வழிநடத்திய இணை ஆசிரியர் கிறிஸ்டியன் வுல்ஃப் ஆகியோர் கூறுகையில்," கடந்த 50 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் கருந்துளை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இப்படி ஒரு பிரம்மாண்டமான, பூமியையே விழுங்கும் அளவிலான ராட்சத கருந்துளையை கண்டறிய அவர்கள் தவறிவிட்டனர். இந்த கருந்துளை ஒரே வினாடியில் பூமி போன்ற ஒரு கிரகத்தையே உள்ளிழுத்துக்கொள்ளும் சக்திகொண்டது" என்று கூறினர்.


இந்த கருந்துளையின் எடை 3 பில்லியன் சூரியங்களின் எடைக்கு சமமாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற மிகப்பெரிய கருந்துளைகள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே  வளர்வதை  நிறுத்திவிட்டன. இந்த குறிப்பிட்ட கருந்துளை மட்டும் வளர்ச்சியை நிறுத்தாமல் உள்ளது விந்தையாக இருக்கிறது. இரு கேலக்சிகள் ஒன்றோடு ஒன்று மோதியதால் இது உருவாகியிருக்கலாமா? என்ற கோணத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


விண்வெளி ஆராய்ச்சியில் இந்த கருந்துளை கண்டறியப்பட்டது புதிய மைல் கல்லாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.