கொரோனா வைரஸ், உலகையே தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து வைரஸ் என்ற சொல்லை கேட்டாலே மக்கள் அலரி அடித்து ஓடுகின்றனர். அதன் பிறகு, பல்வேறு வைரசுகள் உருவாகி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இருந்தபோதிலும், ஏன் ஆண்களை விட பெண்கள் மத்தியில் வைரஸ் தொற்றுகளின் தாக்கம் குறைவாக உள்ளன என்ற கேள்வி விஞ்ஞானிகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
பொதுவாக, பெண்களை விட ஆண்கள் வைரஸ் தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் என்பதால் இந்த நோய்கள் பெரும்பாலும் பாலின அடிப்படையிலானதாகக் கருதப்படுகிறது.
பெண்கள் மத்தியில் வைரஸ் தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பது அவர்களிடம் இருக்கும் X குரோமோசோமுடன் இணைக்கப்பட்ட கூடுதல் மரபணு காரணமாக இருக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வைரஸ் தொற்றின் தீவிரத்தை குறைக்கும் மரபணு:
குணாதிசயத்தின் மாற்றத்திற்கு ஒருவரின் மரபணுவே காரணம். அதாவது, பல மரபணுக்களின் வெளிப்பாட்டை மாற்ற உயிரணுவின் கருவுக்குள் இயங்கும் உடலில் இயற்கையாக நிகழும் கலவையே காரணம். அதேபோல, பெண்கள் மத்தியில் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பதற்கு இந்த மரபணுவே காரணம்.
இதுவே, நேச்சுரல் கில்லர் (NK) செல்கள் எனப்படும் சிறப்பு ஆன்டிவைரல் நோயெதிர்ப்பு செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இந்த புதிய ஆய்வு, நேச்சர் இம்யூனாலஜி என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.
புதிய ஆராய்ச்சியில் தகவல்:
எலிகள் மற்றும் மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், பெண் எலிகள் மற்றும் மனிதர்களில் உள்ள NK செல்கள் Kdm6a எனப்படும் X குரோமோசோம்-இணைக்கப்பட்ட மரபணுவின் கூடுதல் குரோமோசோமை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. UTX எனப்படும் புரதம் வெளிபட இந்த மரபணுவே காரணம்.
UTX ஆனது NK செல் ஆன்டிவைரல் செயல்பாட்டை அதிகரிக்க மரபணுவாக செயல்படுகிறது. மேலும் NK செல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. X குரோமோசோமில்தான் Kd6ma மரபணு அமைந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவரும் ஆய்வை எழுதிய இணை ஆசிரியருமான மொரீன் சன் கூறுகையில், "பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு அதிக NK செல்கள் உள்ளன.
இது நன்கு அறியப்பட்டாலும், வைரஸ் தொற்றுகளின் போது அதிகரிக்கும் NK செல்கள் எண்ணிக்கை ஏன் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு தரவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆண்களை விட பெண்களின் NK செல்களில் அதிக UTX உள்ளது. இது வைரஸ் தொற்றுகளை மிகவும் திறமையாக எதிர்த்துப் போராட அனுமதிக்கிறது" என்றார்.
இந்த ஆய்வு வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில் மட்டுமல்லாமல், பிற நோய்த்தொற்றுகள் மற்றும் புற்றுநோய்களிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர், அதில், NK செல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.