தோஷகானா ஊழல் வழக்கு, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கைக்கே சிக்கலை உண்டாக்கியுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக இம்ரான் கான் லாஹூரில் இருந்து இஸ்லாமாபாத் சென்றபோது, காவல்துறை அவரின் வீட்டுக்குள் நுழைந்தது.


10,000க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய பஞ்சாப் மாகாண போலீஸ் அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர்.


தோஷகானா ஊழல்:


தோஷகானா என்பது அமைச்சரவைப் பிரிவின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு துறையாகும். மேலும் ஆட்சியாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பிற அரசாங்கங்கள் மற்றும் மாநிலங்களின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களால் வழங்கப்படும் விலைமதிப்பற்ற பரிசுகள் இங்குதான் சேமித்து வைக்கப்படுகிறது.


நாட்டின் பிரதமராக பதவி வகித்த அவர் பெற்ற பரிசுகளை விற்றதற்காக, குற்றவியல் சட்டத்தின் கீழ், அவரை தண்டிக்க தேர்தல் ஆணையம் பின்னர் மாவட்ட நீதிமன்றத்தில் புகார் அளித்தது. 


இம்ரான் கான், இந்த வழக்கின் விசாரணைக்காக பலமுறை ஆஜராகாமல் தவிர்த்துவிட்டார்.இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பரசு தொடர்பான விவரங்களைப் பகிராததற்காக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் (ECP) இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 


கைதை தவிர்த்த இம்ரான் கான்:


தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்க்கும் நோக்கில் லாஹூரில் உள்ள தனது வீட்டில் இம்ரான் கான் தலைமறைவாக இருந்தார். இம்ரான் கானின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அந்த வீட்டை சுற்றி பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்தனர். 


கடந்த சில நாள்களாக, இம்ரான் கானை கைது செய்யவிடாமல் அவரின் ஆதரவாளர்கள் காவல்துறையுடன் சண்டையிட்டு வந்தனர்.


இந்த வன்முறையில் 60க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. இறுதியாக, இம்ரான் கான், விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்றபோது, லாஹூர் வீட்டை பாகிஸ்தான் காவல்துறை சோதகனையிட்டனர்.


இம்ரான் கான் கட்சிக்கு தடை விதிக்க திட்டம்:


அப்போது, அந்த வீட்டில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை போலீசார் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதை முன்வைத்து, இம்ரான் கானின் அரசியல் கட்சிக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதை உறுதி செய்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனுவல்லா, "இம்ரான் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ)-யை தடை செய்யப்பட்ட கட்சியாக அறிவிப்பதற்கான செயல்முறையைத் தொடங்க நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


இம்ரான் கான் வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். இம்ரான் கான் வீட்டில் இருந்து ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இது ஒரு தீவிரவாத அமைப்பு என்று பிடிஐ மீது வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரம்" என்றார்.