இந்திய, சவுதி அரேபிய அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம்:


கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய இஸ்லாமியர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இருப்பினும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 79,000 பேருக்கு மட்டுமே சவுதி அனுமதி வழங்கியது. 


இதையடுத்து, ஹஜ் மேலாண்மை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹஜ் கமிட்டிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஆலோசனை நடத்தி புதிய ஹஜ் கொள்கை வகுத்தது. 


இந்த நிலையில், இந்தாண்டு ஹஜ் பயணத்துக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்தியர்கள் செல்லும் வகையில் இந்திய, சவுதி அரேபிய அரசுகளுக்கு இடையே இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சவுதியில் உள்ள ஜித்தா நகருக்கு சென்ற மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் ஆகியோர், சவுதி ஹஜ் அமைச்சர் டாக்டர். தவ்பிக் பின் பவ்சானுடன் இரு தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


1.75 லட்சம் பேருக்கு அடிச்சது ஜாக்பாட்:


இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024ஆம் ஆண்டு, ஹஜ் பயணத்துக்கு செல்ல இந்தியாவில் இருந்து மொத்தம் 1,75,025 யாத்ரீகர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். 1,40,020 இருக்கைகள் ஹஜ் கமிட்டி மூலம் யாத்ரீகர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 35,005 யாத்ரீகர்கள் தனியார் ஆபரேட்டர்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


எக்ஸ் தளத்தில் இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு: "இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இருதரப்பு ஹஜ் ஒப்பந்தம் 2024 கையெழுத்தானதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடன் சேர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சவுதி ஹஜ் அமைச்சர் தவ்பிக் பின் பவ்சானுடன் பரஸ்பர நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்களிலும் ஈடுபட்டேன்" என குறிபிட்டுள்ளார்.


இந்தியாவின் சிறப்பான டிஜிட்டல் முன்முயற்சிகளுக்கும், குறிப்பாக யாத்ரீகர்களுக்கு அத்தியாவசியமான தகவல்களை வழங்குவதில் சவுதி அரேபிய பிரதிநிதிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ஹஜ் யாத்திரையில் குடும்ப உறுப்பினர் இல்லாமல் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் எங்கள் திட்டமானது, அனைவரையும் உள்ளிடக்கிய எங்களின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


 






யாத்ரீகர்கள் அனைவரின் ஆரோக்கியத்தை உறுதிசெய்வது குறித்தும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் பற்றியும் கலந்துரையாடினோம். இந்த கலந்துரையாடல்களின் போது வெளிப்படுத்தப்பட்ட மனப்பான்மையை நான் ஆழமாக மதிக்கிறேன். நமது இருதரப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.