உலகம் முழுவதும் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளான சல்மான் ருஷ்டி யார்..? அவருக்கு இஸ்லாமியர்கள் பலத்த எதிர்ப்பை காட்டியது ஏன்? உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் தலைமறைவாக வாழ்ந்தது ஏன்? என்பதை கீழே விரிவாக காணலாம்.


1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஜூன் மாதம் 19-ந் தேதி அப்போதைய பம்பாயில் பிறந்தவர்தான் சல்மான் ருஷ்டி. இவரது முழுப்பெயர் அகமது சல்மான் ருஷ்டி ஆகும். இந்தியாவில் பிறந்த சல்மான் ருஷ்டி தன்னுடைய 14வது வயதில் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் அவருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு வரலாற்றுத் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.




இஸ்லாமியரான சல்மான் ருஷ்டி இஸ்லாத்தின் மீதான நம்பிக்கைகளை துறந்தார். அவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமையும் கிடைத்தது. சிறு சிறு வேடங்கள் மூலமாக தன்னை நடிகராகவும் சல்மான் ருஷ்டி அடையாளம் காட்டினார். அதன்பின்பு, அவருக்கு எழுத்தின் மேல் இருந்த ஆர்வத்தால் தன்னை ஒரு எழுத்தாளராக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினர்.


அவர் எழுதிய முதல் புத்தகம் க்ரிமஸ். க்ரிமஸ் புத்தகம் பெரியளவில் வெற்றி பெறாததால் அடுத்த புத்தகத்தை எழுத சல்மான் ருஷ்டி போதியளவு நேரம் எடுத்துக்கொண்டார். சுமார் 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சல்மான் ருஷ்டி 1981ம் ஆண்டு மிட்நைட் சில்ட்ரன் என்ற புத்தகம் எழுதினார். அந்த புத்தகம் எழுத்து உலகில் சல்மான் ருஷ்டிக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்தது. இந்த புத்தகம் சல்மான் ருஷ்டிக்கு விருதுகளையும் பெற்றத்தந்தது.




இதையடுத்து, மூன்றாவதாக ஷேம் என்ற நாவலை எழுதினார். இந்த நாவல் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இந்த நாவலுக்கு பிறகு அவர் சாட்டன் வெர்செஸ் என்ற அதாவது சாத்தானின் வசனங்கள் எனப்படும் நாவலை எழுதினார். இஸ்லாம் மதத்தினரையும், நபிகள் நாயகத்தையும் புண்படுத்தும் விதமாக இந்த நாவல் இருப்பதாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


1998ம் ஆண்டு வெளியான இந்த நாவலுக்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நாவலை இந்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாகிஸ்தானும் இந்த நாவலுக்கு தடை விதித்தது. உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் கண்டனக் குரல்களுக்கு ஆளானாலும், சாட்டன் வெர்சஸ் நாவல் விற்பனையில் சக்கைப் போடு போட்டது. இந்த நாவலுக்கு எழுத்துலகின் மிகப்பெரிய விருதான விட்பிரெட் பரிசு வழங்கப்பட்டது.


அதேசமயத்தில், பல நாடுகளிலும் இந்த நாவலுக்கு எதிராக போராட்டம் அதிகரித்தது. இங்கிலாந்தின் ப்ராட்போர்டில் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து இந்த நாவலின் நகலை எரித்தனர். 1989ம் ஆண்டு ஈரானின் மதத் தலைவர் ஹயதுல்லா ருஹோல்லா கோமேனி சல்மான் ருஷ்டிக்கு பத்வா எனும் மதக்கட்டளையை பிறப்பித்ததுடன் அவரை கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளான சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டிஷ் அரசு ஆதரவளித்தது. அதேசமயத்தில், சல்மான் ருஷ்டி தனது மனைவியுடன் பிரிட்டிஷ் அரசு உதவியுடன் தலைமறைவு வாழ்வு அளித்தார்.


உலகம் முழுவதும் இருந்து வந்த தொடர் கொலை மிரட்டல்களாலும், பிரிட்டிஷ் உள்ளிட்ட மேலை நாடுகள் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு அளித்ததாலும் பிரிட்டிஷ் நாட்டிற்கும், ஈரானுக்கும் இடையே இருந்த உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரானின் தெஹ்ரானில் இருந்த பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டது.




தன்னால், இஸ்லாமியர்களுக்கு நிகழ்ந்த கடும் துயரத்திற்கு சல்மான் ருஷ்டி ஆழ்ந்த வருத்தத்தையும் கூறினார். ஈரானின் மதத்தலைவர் ஹயதுல்லா சல்மான் ருஷ்டிக்கு மீண்டும் பத்வாவை பிறப்பித்தார். ருஷ்டிக்கு மட்டுமின்றி சாட்டன் வெர்சஸ் நாவலை வெளியிட்டவர்களுக்கும், விற்பனை செய்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சாட்டன் வெர்சஸ் நாவலை மொழிபெயர்த்த ஹிடோஷி என்ற உதவிப்பேராசிரியர் ஜப்பானியர் டோக்கியோவில் பல்கலைகழகத்திற்கு வெளியே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இத்தாலி மொழியில் மொழிபெயர்த்த எட்டோர் கேப்ரியோலோவும் கத்தியால் குத்தப்பட்டார். இருப்பினும் அவர் உயிர்பிழைத்தார்.


சல்மான் ருஷ்டியின் உயிருக்கு ரூபாய் 3 மில்லியன் வரை பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், 1998ம் ஆண்டு ஈரான் அரசு ருஷ்டிக்கு எதிராக பிறப்பித்த பத்வாவை திரும்ப பெற்றது. அதற்கு பிறகு சல்மான் ருஷ்டி ஏராளமான நூல்களை எழுதினார். 2021ம் ஆண்டு சாட்டன் வெர்சஸ் புத்தகத்தினால் நிகழ்ந்த நினைவுகள் பற்றி நாவலாக வெளியிட்டார்.




இந்த நிலையில், கொலை மிரட்டலுக்கு ஆளான சல்மான் ருஷ்டி சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு கத்திக்குத்துக்கு ஆளாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண