உக்ரைன் போர் கைதிகள் 65 பேரை  ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கோராட் என்ற இடத்தில் ரஷ்யாவின் Ilyushin Il-76 என்ற  விமானம் கிழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.


உக்ரைன்-ரஷ்யா பிரச்னை:


உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்கிற ரீதியில் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.


இதில் இருநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கியுள்ள ரஷ்யா - உக்ரைன் இடையேயான  போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது.  


இந்த போர் உலகளவில் பெரும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகிறது. போரை கைவிட சொல்லி உலக நாடுகள் வலியுறுத்தினாலும் ரஷ்யா செவிசாய்க்கவே இல்லை. இப்படியான நிலையில், உக்ரைன் போர் கைதிகள் 65 பேரை  ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய விமானம் விபத்து:






அதாவது, ரஷ்யாவின்  Ilyushin Il-76  என்ற விமான 65 போர் கைதிகளை ஏற்றி கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. 65 போர் கைதிகளுடன் விமானத்தில் 6 பணியாளர்கள், 3 துணை ராணுவ வீரர்கள் பயணித்துள்ளதாக தெரிகிறது. இந்த  Ilyushin Il-76 விமானம் என்பது துருப்புகள், சரக்குகள், ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இராணுவ போக்குவரத்து விமானமாகும். இந்த விமானத்தில் 90 பயணிகள் வரை பயணிக்க முடியும். 


இந்த நிலையில், உக்ரைன் எல்லை பகுதியான பெல்கோரோட் பகுதியில் 65 உக்ரைன் போர் கைதிகளை ஏற்றிச் சென்ற  Ilyushin Il-76 விமானம் இன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. 


கைதிகள் பரிமாற்றத்திற்காக 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி,  65 உக்ரைன் போர் கைதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  இருப்பினும் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


 போர் கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை கிய்வ் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் நாடாளுமன்ற சபாநாயகர் வியாசஸ்லாவ் வோலோடின் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் (உக்ரைன்) தங்கள் சொந்த வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.