ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அவை அனைத்திற்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஒருபுறம் பேச்சுவார்த்தையில் பங்கேற்றாலும், மறுபுறம் உக்ரைனின் பகுதிகளை ஆக்கிரமிப்பதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தற்போது உக்ரைனின் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் ரஷ்ய படைகள் நழைந்துள்ளன.
உக்ரைனில் 8-வது பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன், ரஷ்ய அதிபர் புதின் சந்தித்த நிலையில், உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொண்டு முன்னேற்றமில்லாமல் தடைபட்ட நிலையில், உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தில் உள்ள கிராமங்களில், ரஷ்யப் படைகள் நுழைந்துள்ளன. இதோடு சேர்த்து 8-வது பிராந்தியத்தில் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது.
டொனெட்ஸ்க் பிராந்தியதில் கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் தொழில்துறை மையமாக விளங்கும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நோவோஹெயோர்ஹிவ்கா மற்றும் சபோரிஸ்கே ஆகிய கிராமங்களில், ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா, 2 கிராமங்களை பிடித்துள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால், அந்த கிராமத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றவில்லை, சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என உள்ளூர் தரைப் படைகளின் செய்தி தொடர்பாளர் விக்டர் ட்ரேஹுபோவ் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய ராணுவப் பலம் கொண்ட ரஷ்யாவை, மீண்டும் பின்னுக்குத் தள்ளும் அழுத்தத்திற்கு உக்ரைன் படைகள் உள்ளாகியுள்ளன. சுமார் 1000 கி.மீ. எல்லையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் சண்டையில், இரு தரப்பிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யப் படைகள் ஏற்கனவே, சுமி, கார்கிவ், லுகான்ஸ்க், டொனெட்ஸ்க், சபோரிஸ்சியா, கெர்சன், மைகோலைவ் பிராந்தியங்களில் ஊடுருவி உள்ளன.
அமைதிப் பேச்சுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் புதின்
கடந்த 2014 மார்ச் மாதம் உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா சட்டவிரோதமாக கைப்பற்றியது, தற்போதைய சண்டையில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. ஒருபுறம் அமைதிக்கான முயற்சிகள் நடைபெற்றாலும், அதை ரஷ்ய அதிபர் புதின் தாமதப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அவர் சந்தித்து பேசினாலும், போர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதே சமயம், உக்ரைனிற்குள் ஊடுருவுவதையும் ரஷ்யா நிறுத்தவில்லை. பேச்சுவார்த்தை ஒருபுறம், தாக்குதல் ஒருபுறம் என, ரஷ்யா தனது ஆட்டத்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இதற்காக, ரஷ்ய அதிபர் புதின் மீது மேற்கத்திய நாட்டு தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, ரஷ்ய அதிபர் புதினையும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் நேரடியாக சந்திக்க வைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், புதின் அதற்கு ஒத்துவருவாரா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.