உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. செய்தி சேகரிக்கச் சென்ற ஒரு செய்தியாளர் குண்டு சத்தத்தைக் கண்டு அச்சமடைந்து ஓடும் ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.














முன்னதாக, கலாச்சார, மொழி ரீதியில் ரஷ்யாவை ஒத்திருக்கும், தன் எல்லையில் இருக்கும் நாடு, அமெரிக்கா உடன் கைகோப்பதும், அமெரிக்கப் படைகள் தங்கள் எல்லையிலும் நிற்பதும் ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. எனினும் உக்ரைன் மக்கள் ரஷ்யக் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதை வெறுத்தனர். ரஷ்ய எதிர்ப்பையும் மீறி, அந்நாட்டு ஆதரவில் அமைந்திருந்த அரசை 2014-ல் போராட்டம் மூலம் பெருமக்கள் திரள் கீழே இறக்கியது.


இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது.  அந்தப் போரில் சுமார் 14 ஆயிரம் பேர் இறந்ததாகத் தகவல் வெளியானது. முடிவில் உக்ரைனின் தென்பகுதியில் உள்ள க்ரீமியா தீபகற்பத்தை (Crimean Peninsula) ரஷ்யா கைப்பற்றியது. வர்த்தகக் காரணங்களுக்கு இந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டே க்ரீமியாவைப் பிடித்தது.


இதனால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. எனினும் ரஷ்யா தனது முடிவில் பின்வாங்கவில்லை.  இதற்கிடையே அதேநேரத்தில் கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடினர். உக்ரைனில் தேர்தல் வந்தது. தொலைக்காட்சியில் அதிபராக நடித்த காமெடி நடிகர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்று நிஜ அதிபரானார். முன்பு தேர்தல் வாக்குறுதியாக, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் ரஷ்ய- உக்ரைன் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அறிவித்திருந்தார்.  




2015-ல் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரஷென்கோ - ரஷ்யாவின் விளாடிமிர் புதின் இடையில் மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆதரவோடு இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மின்ஸ்க் ஒப்பந்தத்தை மீண்டும் தற்போது கொண்டுவர வேண்டும் என்றும் மேலும் சில நிபந்தனைகளையும் ரஷ்யா விதித்தது.


 


எனினும் இதற்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளவில்லை.  மின்ஸ்க் ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு ரஷ்யா அழுத்தம் கொடுக்க, மேற்கத்திய நாடுகளிடம் உதவி கோரினார் ஜெலன்ஸ்கி. வெளிப்படையாகவே நேட்டோவில் சேர விரும்புவதாகவும் பேச ஆரம்பித்தார்.  வெகுண்டெழுந்த ரஷ்யா  இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, தன்னுடைய படைகளைக் கொண்டு வந்து, உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில் நிறுத்தியது. சுமார் 1,50,000 பேர் அங்கே குவிக்கப்பட்டனர். கூடவே மருத்துவ உபகரணங்கள், அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றையும் ரஷ்யா வைத்துள்ளதால் அங்கே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.




இதைத் தாண்டி அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது. போர் எதையும் நடத்தவில்லை என்று தொடர்ந்து புடின் கூறிவருகிறார்.  உக்ரைன் இன்னமும் நேட்டோவில் இணையவில்லை என்பதால், அங்கு நேட்டோ படைகளை அனுப்பமுடியாது. அதனால், நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் உக்ரைனுக்கு அண்டை நாடுகளான எஸ்தோனியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஆதரவுப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து புடின் தனது 8 அம்சங்களை கோரிக்கைகள் முன்வைத்தார். 




ரஷ்யாவின் பாதுகாப்புக்கு சட்டரீதியான உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் அளிக்க வேண்டும். உக்ரைனில் அமெரிக்காவில் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. நேட்டோவில் உக்ரைன், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 


 


இதன்மூலம், கிழக்கு ஐரோப்பாவை முழுமையாகத் தன் வசப்படுத்தத் திட்டமிட்டார் புடின். எனினும் இதற்கு நேட்டோ அமைப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமானது. இதனால் கிழக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டன. இதனால் அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது.  அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளானது.


இதனைத் தொடர்ந்து, ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறுவதாக செய்தி வெளியானது. ஆனால் சில மணி நேரத்திலேயே உக்ரைன் எல்லையில் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுத்துள்ளது.