அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், வெனிசுலா விஷயத்தில் ஒரு அபாயகரமான தவறை செய்யாது என்று நம்புவதாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் அமெரிக்காவின் முடிவுகள் குறித்து ரஷ்யா கவலை கொண்டுள்ளது என்றும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

வெனிசுலாவிற்கு அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தின் மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெனிசுலாவிற்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களையும் தடுத்து கைப்பற்ற ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார் .

முன்னதாக, கடந்த வாரம் வெனிசுலா கடற்கரையில் அமெரிக்கா ஒரு தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கரை கைப்பற்றியதைத் தொடர்ந்து, மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றிச் செல்லும் மற்றும் ஏற்றப்பட்ட கப்பல்கள், வெனிசுலா கடலில் செயலற்ற நிலையில் இருப்பதைத் தொடர்ந்து, பறிமுதல் அபாயம் இல்லாமல், ஒரு தடை மட்டும் அமலில் உள்ளது.

Continues below advertisement

ட்ரம்ப் அபாயகரமான தவறை செய்ய மாட்டார் என நம்புகிறோம் - ரஷ்யா

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், "எங்களுக்கு நட்பு நாடான வெனிசுலாவைச் சுற்றி தொடர்ந்து மற்றும் வேண்டுமென்றே பதற்றங்கள் அதிகரிப்பதை நாங்கள் கவனிக்கிறோம். குறிப்பாக, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முடிவுகளின் ஒருதலைப்பட்சத் தன்மை கவலைக்குரியது" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், "பகுத்தறிவு மற்றும் நடைமுறை அணுகுமுறையால் வகைப்படுத்தப்படும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், ஒரு அபாயகரமான தவறை செய்யாது என்று நாங்கள் நம்புகிறோம்." என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதோடு, அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான உரையாடலை இயல்பாக்குவதை, ரஷ்யா ஆதரித்தது. மேலும், "முழு மேற்கத்திய பகுதிகளில் கணிக்க முடியாத விளைவுகளை" ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலைக்கு அமெரிக்கா செல்லாது என்று நம்புவதாகவும், "மதுரோ அரசாங்கத்தின் போக்கை"  ரஷ்யா  ஆதரிப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிமிட்ரி பெஸ்கோவ் கூறியது என்ன.?

இதனிடையே, அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் நிதானத்தை கடைபிடிக்குமாறு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். மேலும், இது மிகவும் ஆபத்தானது என்று நாங்கள் கருதுகிறோம்" என்று கூறியுள்ளார்.

மேலும், "அதிபர் புதின் சமீபத்தில் அதிபர் மதுரோவுடன் தொலைபேசியில் உரையாடினார். மேலும், எதிர்பாராத முன்னேற்றங்களைத் தவிர்க்க, பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.