இன்று ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மஸ்கட்டில் நடைபெற்ற இந்தியா-ஓமன் வர்த்தக உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்திய பொருளாதாரத்தில் டிஎன்ஏ மாறியுள்ளதாக கூறினார். அவரது பேச்சின் முழு விவரத்தை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

ஓமனில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமனின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சயீத், பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார். மேலும், இந்திய வம்சாவளியினரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, இந்தியா–ஓமன் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசியது என்ன.?

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்த உச்சிமாநாடு, இந்தியா–ஓமன் கூட்டாண்மைக்கு ஒரு புதிய திசையையும், புதிய வேகத்தையும் அளித்து, அதை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல உதவும் என்று கூறினார். மேலும், “நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே நமது முன்னோர்கள் ஒருவருக்கொருவர் கடல்வழி வர்த்தகம் செய்து வருகின்றனர். மும்பைக்கும் மஸ்கட்டுக்கும் இடையிலான அரபிக்கடல் ஒரு வலிமையான பாலமாக மாறியுள்ளதோடு, நமது உறவுகளை வலுப்படுத்தி, நமது கலாச்சார–பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளித்துள்ளது.“ என்றும் அவர் கூறினார்.

Continues below advertisement

மேலும், “கடலின் அலைகள் மாறலாம், பருவங்கள் மாறலாம், ஆனால் இந்தியா–ஓமன் நட்பு ஒவ்வொரு பருவத்திலும் வலுப்பெற்று, ஒவ்வொரு அலையுடனும் புதிய உயரங்களை தொடும் என்று கூறினார். அதோடு, “இன்று நமது தூதரக உறவுகள் 70 ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இது வெறும் 70 ஆண்டுகளுக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, இது நமது பல நூற்றாண்டு கால பாரம்பரியத்தை, வளமான எதிர்காலத்தை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு மைல்கல் ஆகும்“ என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாறியுள்ளது“

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தின் டிஎன்ஏவை மாற்றியுள்ளன,'' என்று கூறினார். மேலும், “ஜிஎஸ்டி, இந்தியா முழுவதையும் ஒரே நாடாக ஒருங்கிணைத்து, ஒரே சந்தையாக மாற்றியுள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.“ என்றும் தெரிவித்தார்.

இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய மோடி

இதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்திய புலம்பெயர் சமூகம், சக வாழ்வுக்கும், ஒத்துழைப்புக்கும் ஒரு வாழும் உதாரணமாக திகழ்கிறது. இன்று நாம் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்று சேர்ந்துள்ளோம். ஒரே நாடு, ஒரே அணி இந்தியாவாக நாம் கொண்டாடுகிறோம்.“ என தெரிவித்தார்.

மேலும், “இந்தியாவில், வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது கலாசாரத்தின் வலிமையான அடித்தளமாக உள்ளது. நம்மை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் புதிய வண்ணங்களை கொண்டுவருகிறது. ஒவ்வொரு பருவமும் ஒரு புதிய திருவிழாவாக மாறுவதோடு, ஒவ்வொரு பாரம்பரியமும் ஓரு புதிய சிந்தனையுடன் வருகிறது. இதனால்தான், இந்தியர்கள் எங்கு சென்றாலும், எங்கு வசித்தாலும் பன்முகத்தன்மையை மதிக்கிறோம்.“ என்று பிதமர் மோடி கூறினார்.