ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், அதனால் தங்கள் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டிருக்கும் டோமாஹாக் ஏவுகணைகளால் தாங்கள் தாக்கப்பட்டால், பதிலடி பலமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அமெரிக்காவின் தடைகள் நட்பற்ற செயல்“
அமெரிக்காவின் தடைகள் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய தடைகள் "தீவிரமானவை" என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதே சமயத்தில், அவை பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் அளவுக்கு வலுவாக இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த பொருளாதாரத் தடைகள் தங்களுக்கு கடுமையானவை என்பது தெளிவாக தெரிவதாகவும், அவை சில விளைவுகளை ஏற்படுத்துமே தவிர, தங்களது பொருளாதார நல்வாழ்வை கணிசமாக பாதிக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், இந்தத் தடைகள் "நட்பற்ற செயல்" என்றும், "இப்போதுதான் மீளத் தொடங்கியுள்ள ரஷ்யா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தாது" என்றும் அவர் கூறியுள்ளார்.
“‘டோமாஹாக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டால் பலமான பதிலடி கிடைக்கும்“
மேலும், அமெரிக்காவிடம் டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரைன் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், "மோதல் அல்லது எந்த சர்ச்சைகளையும் விட, குறிப்பாக போரை விட பேச்சுவார்த்தை எப்போதும் சிறந்தது என்றும், உரையாடல் தொடர்வதை நாங்கள் எப்போதும் ஆதரித்து வருகிறோம்" என்றும் கூறினார்.
ஆனால், உக்ரைன் கோரிவரும் அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணைகளால் ரஷ்யா தாக்கப்பட்டால், அதற்கான பதில் பெருமளவில் இல்லாவிட்டாலும் "மிகவும் பலமாக இருக்கும்" என்று புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடைகளுக்குப் பிறகும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள புதின்
கடந்த புதன்கிழமையன்று, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான ராஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீதும், அவற்றின் பல துணை நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு ரஷ்யாவிற்கு எதிரான முதல் தடை இதுவாகும்.
ட்ரம்ப் தனது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் ரஷ்யாவுடன் உறவுகளை வளர்க்க முயன்றார். ஆனால், புதின் போர் நிறுத்தத்திற்கு உடன்பட மறுத்ததால் அவர் விரக்தியடைந்துள்ளார். அவருடனான தனது அமைதிப் பேச்சுவார்த்தைகள் "எங்கும்" செல்லவில்லை என்று ட்ரம்ப் விமர்சித்தார்.
மேலும், ட்ரம்ப் ரஷ்யாவிற்கு எதிராக புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதை பல மாதங்களாகத் தவிர்த்து வந்தார். ஆனால், புடாபெஸ்ட்டில் புதினுடன் ஒரு புதிய உச்சிமாநாட்டிற்கான திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ட்ரம்ப் பொறுமை இழந்துள்ளார். ஆனால், புதிய தடைகள் மற்றும் உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்ட பிறகும், ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருப்பதாக தெரிகிறது.