உலக அளவில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதற்கு நேர்மாறாக ஜப்பான், ரஷியா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.


குறிப்பாக, 1990களுக்கு பிறகு ரஷியாவின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது அந்நாட்டுக்கு பிரச்னையாக மாறியுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷியாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 


ரஷியாவில் தொடர்ந்து வீழ்ச்சி அடையும் மக்கள் தொகை:


இந்த நிலையில், நாட்டின் மக்கள்தொகையை அதிகரிப்பதே வரவிருக்கும் ஆண்டுகளில் ரஷியாவின் இலக்காக இருக்கும் என அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷிய மக்கள் கவுன்சிலில் பேசிய அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய புதின், "ரஷிய பெண்கள், எட்டு குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். பெரிய குடும்பத்தை உருவாக்குவதை வழக்கமாக கொள்ள வேண்டும். நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று கொள்ளும் வழக்கத்தை ரஷியாவில் பல இனக்குழுக்கள் பின்பற்றி வருகின்றன.


ரஷிய குடும்பங்கள், எங்கள் பாட்டி மற்றும் கொள்ளு பாட்டிகளில் பலருக்கு ஏழு, எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர் என்பதை நினைவில் கொள்வோம். இந்த சிறந்த மரபுகளைப் பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். பெரிய குடும்பங்களாக இருப்பதை வழக்கமாக மாற்ற வேண்டும். 


அதிபர் புதின் கொடுத்த அட்வைஸ்:


ரஷியாவின் அனைத்து மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறை. குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக முறை, ஒழுக்கத்தின் ஆதாரம். ரஷியாவின் மக்கள் தொகையைப் பாதுகாப்பது, அதிகரிப்பது வரவிருக்கும் ஆண்டுகளுக்கும் தலைமுறைகளுக்கும் நம் இலக்காக இருக்கும். இதுதான் ரஷியாவின் எதிர்காலம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ரஷியாவின் எதிர்காலம். நித்திய ரஷியாவின் எதிர்காலம்" என்றார்.


உலக ரஷிய மக்களின் மாநாட்டை ரஷிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் தலைவர் பேட்ரியார்க் கிரில் ஏற்பாடு செய்துள்ளார். இதில், ரஷியாவின் பல பாரம்பரிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


உக்ரைன் போரில் ரஷிய ராணுவ வீரர்கள் இறந்தது பற்றி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேசவில்லை என்றாலும் போரில் ரஷிய ராணுவ வீரர்கள் அதிக அளவில் இறந்திருப்பதால்தான், மக்கள் தொகையை உயர்த்த வேண்டும் என புதின் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. போரின்போது, உக்ரைனில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.