கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்கனவே இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல இந்தியா திட்டமிட்டதாகவும் இதை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியா அதிகாரி ஒருவர்தான் இந்த சதி திட்டத்தை தீட்டியதாகக் கூறப்படுகிறது.


இந்தியா மீது அமெரிக்க பரபரப்பு குற்றச்சாட்டு:


அமெரிக்காவில் ஆயுதங்களையும் போதை பொருள்களையும் சட்ட விரோதமாக விற்று வரும் நிக்கில் குப்தா என்பவர் மூலம், கூலிப்படையை சேர்ந்த ஒருவருக்கு பணம் கொடுத்து பன்னூனை கொலை முயற்சி நடந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இந்த சதி திட்டத்தில் ஈடுபட்ட இந்தியா உளவுத்துறையை சேர்ந்த அதிகாரியின் பெயரை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை.


இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு உலக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இந்தியா இதுகுறித்து பதில் அளித்துள்ளது. காலிஸ்தானி தீவிரிவாதியை கொல்லும் சதி திட்டத்தில் இந்திய அதிகாரியை தொடர்புபடுத்தி அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்து இருப்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


"இந்திய கொள்கைக்கு எதிரானது"


இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி விரிவாக பேசுகையில், "இந்திய கொள்கைக்கு இது எதிரானது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு விசாரணை மேற்கொள்ளும்" என்றார்.


பன்னூனை கொல்ல இந்திய அதிகாரி சதி திட்டம் தீட்டியதாக செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து பேசிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "அமெரிக்கா குற்றம் சுமத்தியிருக்கும் சூழலில், நிஜ்ஜார் கொலை விவகாரம் தொடர்பாக கனடா சுமத்திய குற்றச்சாட்டையும் இந்தியா தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும்" என்றார்.


இதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கு கனடா இடம் அளித்ததே இந்த விவகாரத்தில் முக்கிய பிரச்னை" எனக் கூறியுள்ளது.


இந்த சதி திட்டத்தில் இந்திய அரசு ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக சதி திட்டத்தை தீட்டியவர்களே அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லையா அல்லது அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) அவர்களின் திட்டத்தை முறியடித்தார்களா என்பது குறித்து தெரியவில்லை என தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.