உக்ரைன் உடனான போரை நிறுத்த மாட்டேன் என ரஷ்ய அதிபர் புதின் அடம்பிடித்து வரும் நிலையில், எவ்வளவோ முயன்றும் ட்ரம்ப்பால் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் புதின். அதுதான், புளூடோனியம் ஒப்பந்த ரத்து. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
புளூடோனியம் ஒப்பந்தம்
கடந்த 2000-மாவது ஆண்டில், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே, புளூடோனியம் மேலாண்மை கறித்து ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு, 2010-ம் ஆண்டில், அந்த ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்பட்டது.
அதன்படி, ரஷ்யா தனது கையிருப்பில் இருக்கும் 34 மெட்ரிக் டன் புளூடோனியத்தை, அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தாமல், அவற்றை அணுமின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் மூலம், சுமார் 17,000 அணு ஆயுதங்களின் உற்பத்தையை தடுத்து நிறுத்திவிட்டதாக அப்போது அமெரிக்கா கூறியது.
உறவுகள் பாதித்ததால் புளூடோனியம் ஒப்பந்தத்தை ரத்து செய்த புதின்
இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் மோசமடைந்தது. அப்போது, புளூடோனியம் ஒப்பந்தத்தை ரஷ்ய அதிபர் புதின் இடைநிறுத்தி வைத்தார்.
இந்நிலையில், தற்போது உக்ரைன் உடனான ரஷ்யாவின் போரை நிறுத்துவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. ட்ரம்ப்பும் புதினும் நேரில் சந்தித்து பேசியும் எந்த பலனும் இல்லை. இதனால், புதின் மீது ட்ரம்ப் கோபத்தில் உள்ளார்.
மேலும், சமீபத்தில் இரு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைகள் பரிமாரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அமெரிக்காவிடமிருந்து டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரைன் கோரி வரும் நிலையில், அந்த ஏவுகணைகளால் தாங்கள் தாக்கப்பட்டால், பலமான பதிலடி கிடைக்கும் என புதின் எச்சரித்தார்.
இதேபோல், சில நாட்களுக்கு முன், நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் அணுசக்தி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக ரஷ்யா நடத்தி அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரஷ்யாவின் கடல் எல்லைக்கு அருகிலேயே தங்களின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிற்பதாகவும், அது நீண்ட தூரம் பயணித்து தாக்க வேண்டிய அவசியம் கூட இல்லை என்றும் ட்ரம்ப் மறைமுகமாக புதினை எச்சரித்தார்.
இப்படி, இரு தரப்பிற்கும் தற்போது மனக்கசப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப்பிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியமாக புளூடோனியம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். இதனால், ரஷ்யா அணு ஆயுதங்களை தயாரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது ட்ரம்ப்பின் எதிர்வினை என்ன என்பது பெரும் எதிர்பர்ப்பாக உள்ளது. இருவரும் கோபமானால், விளைவுகள் மோசமாகவே இருக்கும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.