ChatGPT-ஐ உருவாக்கும் OpenAI-ன் தரவுகளின்படி, அதன் ஜெனரேட்டிவ் AI சாட்போட்டைப் பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தற்கொலையில் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவீனத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்
மனிதனின் வாழ்வில் தொழில்நுட்பங்கள் தேவை தான். ஆனால், அந்த தொழில்நுட்பத்தாலேயே அவர்கள் பாதிக்கப்படுவதுதான் கொடுமையான விஷயம். இன்றைய காலகட்டத்தில் அது தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆம், தொழில்நுட்பம் நவீனமாகி வரும் நிலையில், அதனால் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
அதிலும், மொபைல் ஃபோன்கள் வந்த பிறகு, வயது வித்தியாசம் இல்லாமல், அதில் மூழ்கிக் கிடப்போரே அதிகம். குறிப்பாக, சிறு குழந்தைகள் அதற்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்றே கூறலாம். அதனால் இளம் வயதினர் பலர் மனநோய்க்கு ஆளாகும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. இந்த நிலையில், தற்போது ஏஐ-யின் ஆதிக்கம் நிலைமையை இன்னும் மோசமாக்கியள்ளது. கிட்டத்தட்ட மனிதர்களுக்கு இணையாக அதுவும் செயல்படுவதால், சக நிஜ மனிதர்களை விட்டுவிட்டு, கோடிக்கணக்கானோர் ஏஐ உடன் பழக ஆரம்பித்துவிட்டனர்.
தற்போது அந்த வரிசையில் மிகவும் பிரபலமாக உள்ள ChatGPT உடன் உரையாடுவோர் ஏராளம். இந்நிலையில் தான், அதை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம் ஒரு பகீர் தரவை வெளியிட்டுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
OpenAI கூறியுள்ளது என்ன.?
கடந்த திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு வலைப்பதிவு இடுகையில், AI நிறுவனம் தோராயமாக 0.15 சதவீத பயனர்கள் "தற்கொலை திட்டமிடல் அல்லது நோக்கத்தின் வெளிப்படையான அறிகுறிகளை உள்ளடக்கிய உரையாடல்களைக்" கொண்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், ChatGPT-ஐ பயன்படுத்துவதாக OpenAI தெரிவிக்கும் நிலையில், இது சுமார் 1.2 மில்லியன், அதாவது 12 லட்சம் மக்களை குறிக்கிறது. வாராந்திர செயலில் உள்ள பயனர்களில் தோராயமாக 0.07 சதவீதம் பேர் மனநோய் அல்லது பித்து தொடர்பான மனநல அவசரநிலைகளின் சாத்தியமான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் அந்த நிறுவனம் மதிப்பிடுகிறது. அதாவது, சுமார் 6 லட்சம் மக்கள். இந்த தரவு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்னை உருவானது எப்படி.?
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கலிபோர்னியாவைச் சேர்ந்த இளைஞர் ஆடம் ரெய்ன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த பிரச்சினை வெடித்துள்ளது. தற்கொலை செய்து கொள்வது எப்படி என்பது குறித்து ChatGPT அவருக்கு குறிப்பிட்ட ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறி, அவரது பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர்.
அப்போதிலிருந்து, OpenAI, ChatGPT-க்கான பெற்றோர் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. மேலும், நெருக்கடி நேர ஹாட்லைன்களுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல், முக்கியமான உரையாடல்களை பாதுகாப்பான மாதிரிகளுக்கு தானாக மாற்றியமைத்தல் மற்றும் நீட்டிக்கப்பட்ட அமர்வுகளின் போது பயனர்கள் இடைவேளை எடுக்க மென்மையான நினைவூட்டல்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
மனநல அவசர நிலைகளில் உள்ள பயனர்களை அடையாளம் கண்டு பதிலளிக்க, அதன் ChatGPT சாட்போட்டையும் புதுப்பித்துள்ளதாகவும், சிக்கலான பதில்களை கணிசமாகக் குறைக்க, 170-க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் OpenAI தெரிவித்துள்ளது.
அதன்படி, புதுப்பிக்கப்பட்ட GPT-5 மாடல், தற்கொலை தொடர்பான உரையாடல்களில், பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதில், பழைய மாடல் 77 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில், புதிய மாடல் 91 சதவீதம் துல்லியத்துடன் செயல்படுவதாக OpenAI தெரிவித்துள்ளது.