சீனாவின் தலைநகர் பீஜிங்கில், இரண்டாம் உலகப் பேர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், இன்று பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில், சீனாவின் நட்பு நாடுகள் உள்பட 26 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதில், ரஷ்ய அதிபர் புதினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பங்கேற்பு தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அணிவகுப்பில், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் யாரும் கலந்தகொள்ளவில்லை.

நீண்ட காலத்திற்குப் பின் பயணம் மேற்கொண்ட புதின், கிம் ஜாங் உன்

அமெரிக்கா அனைத்து நாடுகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு, வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர், சீனாவின் தியான்மென் சதுக்கத்திற்கு வருகை தந்து, சீன ராணுவத்தின் பிரமாண்ட அணிவகுப்பை பார்வையிட்டனர்.

அமெரிக்காவிற்கு எதிராக இணைந்துள்ளனரா.?

சீனாவிற்கு சென்ற புதின் மற்றும் கிம் ஜாங் உன் ஒற்றுமையாக பொதுவெளியில் தோன்றியதை வைத்து பார்க்கும்போது, அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை அவர்கள் உறுதி செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

வரி என்ற பெயரில் உலக நாடுகளுடன் அமெரிக்கா சண்டையிட்டு வரும் நிலையில், இவர்களது இந்த நடவடிக்கை, நிச்சயம் அமெரிக்காவுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

பிரமாண்ட அணிவகுப்பை பார்வையிட்ட மற்ற தலைவர்கள் யார் யார்.?

சீனாவில் நடந்த இந்த பிரமாண்ட அணிவகுப்பில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், கம்போடியா மன்னர் நரோதம் சிகாமணி, வியட்நாம் அதிபர் லுவாங் குவாங், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஈரான் அதிபர் மசூர் பெஷெஸ்கியன், பெலாரஷியாவின் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ, மியான்மர் ராணுவ தலைவர் ஆங் ஹிலாங், கசகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட், கியூபா அதிபர் மிகுவெல் டயாஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ஐரோப்பிய நாடுகளில், செர்பிய அதிபர் மற்றும் ஸ்லோவாக்கியா பிரதமரைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவின் தலைவர்களும், சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கவில்லை.

எனினும், அமெரிக்காவிற்கு எதிராக சீனா, ரஷ்யா, வட கொரியா என அனைவரும் ஒன்று கூடியுள்ளது, இந்தியாவிற்கு சற்று ஆறுதலான விஷயமாகத் தான் இருக்கும். ஏனென்றால், ரஷ்யா ஏற்கனவே இந்தியாவிற்கு நட்பு நாடுதான், அதேபோல், சீன அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் இந்தியாவின் நட்பை விரும்பி வந்திருக்கிறார். இதனால், அமெரிக்காவிற்கு எதிராக இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பு இருக்கிறது என்றே சொல்லலாம்.