அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை மேற்கோள் காட்டி, இந்தியாவிற்கான வரிகளை உயர்த்துவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, தங்களிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா சட்டவிரோத வர்த்தக அழுத்தத்தை செலுத்துவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

Continues below advertisement

அமெரிக்காவிற்கு அடிபணியாத ரஷ்யா

உக்ரைனுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர மாஸ்கோ நடவடிக்கை எடுக்காவிட்டால், ரஷ்யா மீதும், அதனுடன் எரிசக்தி வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும் புதிய தடைகளை விதிப்பதாக, கடந்த வெள்ளிக் கிழமை டிரம்ப் அறிவித்திருந்தார். அதற்கான காலக்கெடு இருந்தபோதிலும், போர் குறித்த தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் காட்டவில்லை.

“அமெரிக்காவின் அழுத்தம் சட்டப்பூர்வமானது அல்ல“

மேலும் ரஷ்யா உடன் வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான அறிக்கைகள் மற்றும் தங்களுடன் வர்த்தகம் செய்யாமல் இருக்க பல நாடுகளை கட்டாயப்படுத்தும் முயற்சிகள் நடப்பது குறித்தும் தாங்கள் கேள்விப்படுவதாகவும், அத்தகைய அறிக்கைகள், அழுத்தங்களை சட்டப்பூர்வமானதாக தாங்கள் கருதவில்லை" என்றும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Continues below advertisement

மேலும், இறையாண்மை கொண்ட நாடுகள் தங்கள் சொந்த வர்த்தக கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளன என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அது குறித்து தெரிவித்த அவர், "இறையாண்மை கொண்ட நாடுகள் தங்கள் சொந்த வர்த்தக கூட்டாளர்களையும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டாளர்களையும், ஒரு குறிப்பிட்ட நாட்டின் நலன்களுக்காக, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் வடிவங்களைத் தாங்களாகவே தேர்வுசெய்யும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பெஸ்கோவ் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு இந்தியாவும் எதிர்ப்பு

இதனிடையே, டிரம்பின் வரி அச்சுறுத்தல்களை "நியாயமற்றது" என்று இந்தியா கூறியுள்ளதுடன், நாட்டின் பொருளாதார நலன்களை பாதுகாப்பதாகவும் சபதம் செய்துள்ளது. "எந்தவொரு பெரிய பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் கூறியுள்ளது.

உக்ரைன் மோதல் வெடித்த பிறகு ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியபோது, அமெரிக்கா "அத்தகைய இறக்குமதிகளை தீவிரமாக ஊக்குவித்தது" என்பதை, இந்தியா அமெரிக்காவிற்கு நினைவூட்டியுள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களைத் தனிமைப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டையும் இந்தியா எதிர்த்துள்ளது.

இந்தியாவின் இறக்குமதிகள் "உலகளாவிய சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு தேவை" என்றாலும், அதை விமர்சிக்கும் நாடுகள் "அத்தகைய வர்த்தகம் ஒரு முக்கிய கட்டாயமாக இல்லாவிட்டாலும்", "ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே கூறியது.

டிரம்பின் அச்சுறுத்தல்களை மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ரஷ்யாவும் ஆதரவாக குரல் கொடுத்திருப்பது, இந்தியாவிற்கு ஒரு பலமாக அமைந்துள்ளது.