காசாவில் இருந்து தெற்கு இஸ்ரேலில் ராக்கெட்டுகள் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேற்காசியா முழுவதும் போரால் பற்றி எரிந்து வருகிறது. காசாவில் தொடங்கிய போர் ஈரான் வரை விரிவடைந்துள்ளது. இதற்கு எல்லாம் தொடக்கப்புள்ளியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் அமைந்தது.
போரால் நிலைகுலைந்த மத்திய கிழக்கு நாடுகள்:
பதில் தாக்குதல் நடத்துகிறோம் என சொல்லி போரில் இறங்கிய இஸ்ரேல், பிரச்னையை மத்திய கிழுக்கு நாடுகள் முழுவதும் பரவ செய்துள்ளது. காசா போர் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது சிறிய சிறிய தாக்குதலை நடத்தி வந்தது லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா.
காசாவில் ஏற்கனவே 40,000க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம், லெபனானில் தாக்குதலை தொடங்கியது. பேஜர், வாக்கிடாக்கி தாக்குதல் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்ரேலே காரணம் என சொல்லப்படுகிறது.
இதையடுத்து, லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. போரில் பெரும் திருப்பமாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் பாதுகாப்பு படை கொலை செய்தது.
இஸ்ரேலுக்குள் சீறி பாய்ந்த ராக்கெட்கள்:
அதன் தொடர்ச்சியாக, தற்போது ஈரான், இஸ்ரேல் நாடுகள் இரண்டும் நேரடியாக போரில் குதித்துள்ளன. கடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு ஒரு நாளுக்கு முன்பு காசாவில் இருந்து தெற்கு இஸ்ரேலில் ராக்கெட்டுகள் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "பல ராக்கெட்டுகள் வடக்கு காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைவது அடையாளம் காணப்பட்டது. ஒரு எவுகணை இடைமறிக்கப்பட்டது, மீதமுள்ளவை திறந்த பகுதிகளில் விழுந்தன" என குறிப்பிட்டுள்ளது.