பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் மத்தியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பின்ச்சர் மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அரசின் துணைக் கொறடாவாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்தார்.
இதனிடையே கடந்த ஜூன் 29 ஆம் தேதி கிறிஸ் பின்ச் கிளப் ஒன்றில் அதிகளவு மது அருந்தி விட்டு இரண்டு ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தகராறும் செய்துள்ளார். இது பூதாகரமாக வெடித்ததும் பின்ச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, கடந்த ஜூலை 5 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த போரிஸ், கிறிஸ் பின்ச் பற்றிய குற்றச்சாட்டு குறித்து தெரிந்திருந்த போதும், அவரைத் துணை கொறடாவாக நியமித்தது எனது தவறு தான் என கூறினார். இதற்காக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனை காரணம் காட்டி அந்நாட்டின் நிதியமைச்சரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் க்வின்ஸும் ராஜினாமா செய்ய போரிஸூக்கு நெருக்கடி ஆரம்பித்தது.
மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின், துணைத் தலைவர் பிம் அஃபோலமி, வர்த்தக தூதர் ஆண்ட்ரூ ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய பரபரப்பான சூழல் நிலவத் தொடங்கியது. சொந்தக் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என இருவரும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமாவை அறிவித்தார்.
இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் கன்சர்வேட்டிவ் கட்சி இறங்கியுள்ளது. அந்த வகையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல் சுற்றில் இங்கிலாந்தின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ரிஷி சுனக்கிற்கு வர்த்தகத்துறை இணையமைச்சர் பென்னி மோர்டான்ட், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் கடும் சவால் அளித்து வருகின்றனர். முன்னதாக, அதிகாரப்பூர்வமாக பிரசாரத்தை தொடங்கிய லிஸ், கடினமான முடிவுகளை எடுப்பதற்கான அனுபவம் தனக்கு இருப்பதாக கூறியுள்ளார்.
தற்போது போட்டியில் ஐந்து பேர் உள்ளனர். பிரெக்சிட் ஆதரவாளரும் அட்டர்னி ஜெனரலுமான சுயெல்லா பிராவர்மேன் இரண்டாவது சுற்றில் 30 வாக்குகளை பெற தவறியதால் அடுத்த சுற்றிற்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்தனர்.
தேர்தல் அட்டவணையின் படி, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 5 அன்று அறிவிக்கப்பட உள்ளார். கடந்த வாரம் கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் தனது விருப்பத்தை அறிவித்ததிலிருந்து, ரிஷி சுனக் தனது கட்சியின் நாடாளுமன்ற சகாக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். ஆனால், கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள், பென்னி மோர்டாண்டிற்கு பின் திரள்வது ரிஷி சுனக்கிற்கு கடும் சவாலாக இருக்கிறது.
இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.