தென்கொரியாவின் இச்யொன் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் விமானம் பிலிப்பைன்ஸின் மெச்சன் நகருக்கு பயணித்தது.


விமானம் நேற்று இரவு பிலிப்பைன்ஸ் மெச்சன் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க நடந்த முயற்சி தோல்வியடைந்தது.


இந்நிலையில், 3-வது முறையாக விமானத்தை விமானி தரையிறங்க முற்பட்டார். அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் இருந்ததாகத் தெரிகிறது. இதனால், தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளி மீது பாய்ந்தது. 


இதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் உள்பட 173 பேரும் அவசரகால வழி வழியாக விமானத்தில் இருந்து குதித்து தப்பித்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து மெச்சன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. புல்வெளியில் பாய்ந்த விமானத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓடுதளம் சரிசெய்யப்பட்ட பின் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோஸ்டாரிகாவில் விபத்து- 6 பேர் பலி


முன்னதாக, மெக்சிகோவிலிருந்து கோஸ்டாரிகாவின் லிமோன் விமான நிலையத்திற்கு ஐந்து ஜெர்மன் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிய ரக விமானம், கோஸ்டாரிகா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானது. ரிசார்ட் நகரமான லிமோனுக்குச் வந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனதாக, கோஸ்டாரிகா பாதுகாப்பு அமைச்சர் டோரஸ் தெரிவித்தார்.


ஒன்பது இருக்கைகள் கொண்ட இத்தாலி தயாரிப்பான அந்த விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கோஸ்டாரிகா அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப் பயணிகள் குறித்த தேடுதல் நடவடிக்கை உடனடியாக தொடங்கிய நிலையில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் ஜெர்மன் தொழிலதிபர் உள்பட 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை எந்த உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கோஸ்டாரிகாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் மார்ட்டின் அரியாஸ் கூறினார்.


முன்னதாக, குஜராத்தில் விமானங்கள் விரைவில் தயாரிக்கப்படும் என்றும், அவற்றின் உதிரி பாகங்கள் மாநிலத்தின் ராஜ்கோட்டில் தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.


மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சென்றார். அங்கு டிசம்பர் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் ராஜ்கோட் நகரின் ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வீடுகள் உள்ளிட்ட பல நலதிட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் கூட்டத்தில் உரையாற்றினார்.


ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பொறியியல் தொழிற்சாலையை பாராட்டி பேசிய மோடி, விரைவில் குஜராத்தில் விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும், அவற்றின் உதிரி பாகங்கள் ராஜ்கோட்டில் தயாரிக்கப்படும் என்றும் கூறினார். சில தலைவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு தங்களுக்கென்று பங்களாக்கள் கட்டிக் கொண்டார்கள், ஆனால் ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று யாரையும் குறிப்பிடாமல் அவர் விமர்சித்தார்.