“Rich get Richer; Poor get Poorer” என்பது சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறிக்கும் அப்பட்டமான சொற்றொடர். இச்சொற்றொடரை முழுவதுமாக களைந்து ஏற்றத்தாழ்வுகளே இல்லாத சிலியை உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்தித்தனர் இடது சாரி முன்னணியினர். வலதுசாரி முன்னணியினரை எதிர்த்து கிட்டதட்ட பத்து சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் இடதுசாரி கொள்கைக் கூட்டணியை சேர்ந்த Gabriel Boric. 36 வயதே நிரம்பிய சட்டம் படித்து மாணவ தேர்தல்களில் பங்கேற்றதின் வழியே சட்ட பணியினை விட அரசியலே பிரதானம் என்ற கொள்கையோடு களம் கண்ட போரிக் வெற்றி பெற்றுள்ளார். 1973-ல் நடைபெற்ற ராணுவ புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்ட இடதுசாரி கொள்கையைக் கொண்ட அதிபர் Allende ஆட்சிக்கு பிறகான இடதுசாரி கொள்கைகளை கொண்ட ஆட்சி கேப்ரியல் போரிக்கின் இந்த ஆட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் சித்தாந்த மாற்றம்
சிலி நாட்டில் அல்லாண்டே மரணத்திற்கு பிறகு ராணுவ ஆட்சி நடந்து வந்தது. 1988-ல் நடைபெற்ற ஓட்டெடுப்பின் மூலமாக ராணுவ ஆட்சியாளர் Augusto Pinochet-ன் ராணுவ ஆட்சி நீக்கப்பட்டு, மீண்டும் 1990-ல் ஜனநாய ஆட்சி மலர்ந்த சிலியில், போரிக் வெற்றி பெறும் வரை வலதுசாரி கொள்கைகளை கொண்ட ஆட்சியாளர்களே வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். கிட்டதட்ட முப்பது ஆண்டுகளுக்கு பிறகு கேப்ரியல் போரிக் ஆட்சிக்கு வந்திருப்பதென்பது ஒரு ஆட்சி மாற்றமாக மட்டுமின்றி சித்தாந்த மாற்றம் என்றால் மிகையில்லை. வலதுசாரி கொள்கைகளுக்கு மாற்றாக இடதுசாரி கொள்கையின் தேர்வு என்பது மக்களின் அரசியல் பார்வையில் இது வரையிலுமான வலதுசாரி அரசாங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவென்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
போரிக்கின் அரசியல் பயணம்
2008-ல் சிலியின் பல்கலைக்கழக மாணவ கூட்டமைப்பில் போட்டியிட்டு உறுப்பினராக வெற்றி பெற்ற கேப்ரியல் போரிக், 2009-ல் அவர் சட்டம் படித்த கல்லூரியின் மாணவ சங்கதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே, தான் சட்டப்பணியில் ஈடுபடப்போவதில்லை, அரசியலே தனது பிரதானம் என்ற கொள்யோடு அவர் இருந்தார். பின் நாட்களில் சிலியின் பல்கலைக்கழக செனட் சபையின் உறுப்பினராக அவர் தேர்ந்தடுக்கப்பட்டதின் மூலமாகவும் அதனை அறிய முடிகிறது. அப்படியாக 2013-ல் முதல் முறையாக மக்களரசியல் அமைப்பு தேர்தல்களில் பங்கேற்க துவங்கிய கேப்ரியல் போரிக்கின் அரசியல் பயணம், உச்சத்தை எட்டியது 2021-ல் என்றால் மிகையில்லை. 2019 அக்டோபரில் போக்குவரத்து துறையில் அமல்படுத்தப்பட்ட விலை உயர்வை எதிர்த்து மக்கள் ஆரம்பித்த போராட்டத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் ஒடுக்க ராணுவத்தை களத்தில் இறக்கினர். அது பூமாராங்-ஆக மாறி மக்களை கொந்தளிக்கச் செய்தது. அப்போராட்டம் பெரும் புரட்சியாக வெடித்த போது அதில் முக்கியமான பங்களிப்பினை செய்ததின் வழியே வெகுமக்களிடையே சென்றடைந்திந்தார் போரிக். சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கச் சொல்லியும், பொருளாதார மந்தநிலையை நீக்கச் சொல்லியும் உள்ளிட்ட கோரிக்கைகளோடும்; கட்டுபாடற்ற தனியார் மயம், நவதாராளமய கொள்கைகள், தொழிற்சங்கங்களின் மீதான தடை, வர்த்தக கூட்டமைப்புகள் செயல்படாமை போன்றவற்றை எதிர்த்தும் நடைபெற்ற போராட்டங்கள் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்தது.
2021-ல் அவரது கட்சியின் அதிபர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார் கேப்ரியல் போரிக். 2019-ல் நடந்த போராட்டத்தில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளையே தனது பிரதான தேர்தல் வாக்குறுதிகளாகவும் அளித்தார் போரிக். பல்வேறு கட்ட வாக்கெடுப்பிற்கு பின்னர் 2021 டிசம்பரில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வலதுசாரி கொள்கையின் சார்பாக போட்டியிட்ட அந்தோனியோ கஸ்த்-ஐ தோற்கடித்து 56 சதவிகித வாக்குகளைப் பெற்று மார்ச் 2022-ல் வெற்றி பெற்றார் போரிக். அல்லெண்டேவிற்கு பின் இடதுசாரி கொள்கையைக் கொண்ட அதிபராக அவர் பதவி ஏற்றுள்ளார். சிலியின் மிக இளம் வயதைக் கொண்ட அதிபராக போரிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகை உற்று நோக்கச் செய்த கேபினட்
அதிபராக பதவியேற்ற அன்று போரிக் நிகழ்த்திய மக்களுக்கான உரையில் தனது தலைமையிலான அரசின் சித்தாந்தங்கள் வேறாகக் கொண்டிருந்தாலும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கியவர்களுக்கான அரசாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதேபோன்று, அல்லாண்டே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஃபிடல் கேஸ்ட்ரோ சொன்ன அறிவுரையான”இடதுசாரி கொள்கையை அடிப்படையாக வைத்து புரட்சியின் மூலமாக பெற்றுள்ள வெற்றியை தக்கவைத்துக் கொள்ள, வலதுசாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அதே சிந்தனையோடு அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே சாத்தியம்” எனச் சொன்னதினை சுட்டிக்காட்டும் சில அரசியல் விமர்சகர்கள், அதனை அல்லாண்டே கட்டுப்படுத்துவதற்குள் ராணுவ புரட்சியின் விளைவாக மரணமடைந்தார் என்பதினையும் சொல்கிறார்கள். அனைவருக்குமான அரசு எனச் சொல்லும் கேப்ரியல் போரிக் சூழலை திறம்படக் கையாள்வார் என மக்கள் நம்புகிறார்கள். போரிக்-கின் அரசாங்கத்தில் மொத்தமுள்ள 24 அமைச்சர்களில் 14 பேர் பெண்கள் என தன் கேபினெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அவரது செயல் சர்வதேச சமூகத்தை சிலியை நோக்கி திரும்பச் செய்தது. அவரது அமைச்சரவையில் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தன்னோடு பயணித்த சக மாணவ சங்க பிரதிநிதிகளையும் குறிப்பாக அல்லாண்டேவின் பேத்தியையும் இணைத்துள்ளார் போரிக்.
மாற்றம் மக்களுக்கானதாகுமா ?
போரிக்-ன் இடதுசாரி கூட்டணிக்கு, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கான முழுமையான அதிகார பகிர்வையும் முன் வைக்கும் அதே வேளையில் தனியார்மயத்தினை அடியோடு எதிர்க்கிறார் போரிக். முழுமையான பலமில்லாத சபைகளில் எப்படி தனது திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ராணுவ புரட்சியின் மூலமாக ஆட்சிக்கு வந்த அகஸ்டோ பினோசட்-ஆல் புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு விரோதமானதாகக் கருதப்பட்டது. அதற்கு பிறகான ஜனநாய ஆட்சியில் தொடங்கப்பட்ட மக்களுக்கான புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. எனவே, வலதுசாரிகளால் முன் மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத்தினை முடித்து நிறைவேற்றும் பொறுப்பும் போரிக்கிற்கு உள்ளது.
சிலியில் நிலவும் பொருளாதார மந்தநிலையையும் நவதாராளமயத்தையும், முதலாளித்துவத்தை எதிர்க்கும் கொள்கைகளைக் கொண்டு சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை களைவதாகக் கொடுத்துள்ள தனது வாக்குறுதிகளையும் போரிக் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்ற கேள்விக்கு, காலத்திடமே பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்போம்…
- அ. கார்த்திகேய பாலாஜி