மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது கொரோனா பெருந்தொற்று. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு விதிமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்படத் தொடங்கியுள்ளன. மூன்றாம் அலை என அறிவிப்பு எழத் தொடங்கியுள்ள நிலையில், ஒரு பக்கம் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு வகையால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முந்தைய கொரோனா வைரஸோடு ஒப்பிடுகையில், ஒமிக்ரான் திரிபு வைரஸ் எந்தளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முந்தைய கோவிட் திரிபு வகை வைரஸ்களோடு ஒப்பிடுகையில் ஒமிக்ரான் திரிபு ஏற்படுத்தும் தொற்று நுரையீரல் பாதிப்பு எதுவும் ஏற்படுத்தவில்லை எனப் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மேலும் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், எலிகள் மீது மேற்கொண்ட ஒமிக்ரான் ஆய்வுகளின் முடிவுகளில் நுரையீரல் பாதிப்பு குறைவாக ஏற்பட்டுள்ளது எனவும், எடை குறைவு பெரிதாக ஏற்படவில்லை எனவும், மரணம் அடையும் விகிதம் குறைந்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
மேலும் பிற திரிபுகளோடு ஒப்பிடுகையில், ஒமிக்ரான் திரிபு வைரஸால் பாதிக்கப்பட்ட எலிகளின் நுரையீரலில் பத்து மடங்கு குறைவான ஒமிக்ரான் தொற்று மட்டுமே ஏற்பட்டுள்ளது என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் ஒமிக்ரான் திரிபு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் திசுக்களில் ஆய்வு செய்துள்ளனர். அதில் அவர்கள் முந்தைய திரிபுகளோடு ஒப்பிடுகையில், ஒமிக்ரான் திரிபு பாதிக்கப்பட்ட 12 நுரையீரல்கள் ஆய்வு செய்ததில் அவை பிறவற்றை விட மெதுவாக வளர்வது தெரிய வந்துள்ளது.
ஒமிக்ரான் திரிபு வைரஸ் நுரையீரலின் கீழ்ப்பகுதியில் அதிகளவில் பரவாமல் இருப்பதால், அது பெரியளவிலான ஆபத்துகளை ஏற்படுத்தவில்லை என தொற்று நோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஒமிக்ரான் திரிபு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், டெல்டா திரிபு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குச் சுமார் 80 சதவிகிதம் குறைவாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு குறைந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மேற்கொண்ட ஆய்வுகளும் ஒமிக்ரான் திரிபு தொற்று சுமார் 70 சதவிகிதம் குறைவான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளன.
ஒமிக்ரான் திரிபு பெரியளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வுகள் கூறினாலும், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். `ஒமிக்ரான் என்பது சாதாரண சளி, காய்ச்சல் அல்ல. மருத்துவக் கட்டமைப்புகள் திடீரென நிரம்பி வழியும் வாய்ப்புகள் ஏற்படலாம். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், மருத்துவக் கட்டமைப்பு மக்களைப் பரிசோதிக்கவும், கண்காணிக்கவும் பாதுகாக்கப்பட வேண்டும்’ என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.