ட்ரம்ப் மீது விசாரணை நடத்தாவிட்டால் சுலைமானி கொலைக்கு பழிதீர்ப்போம் என ஈரான் அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ரஹிம் ரைஸி, அந்நாட்டின் ராணுவத் தளபதியான ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாவது நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது இதனைத் தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் நாட்டின் அதிபருக்கு அடுத்த நிலையில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஈரான் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. இரானின் சக்தி வாய்ந்த தலைவர் காசிம் கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாவது நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிபர் இப்ரஹிம் ரைஸி, ”ட்ரம்பும், முன்னாள் வெளியுறவுச் செயலர் பாம்பியோவும் இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஜெனரல் சுலைமானி கொலைக்கு நாங்கள் வஞ்சம் தீர்ப்போம். ட்ரம்ப்தான் சுலைமானி படுகொலையில் முக்கியக் குற்றவாளி. அவர் தான் ரத்தக் கைகள் கொண்ட கொலையாளி. அவர்தான் அடக்குமுறைவாதி. அவரை இஸ்லாமிய சட்டப்படி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவரின் மீது இறைவனின் நீதிப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
இந்தப் பேச்சு மேற்கத்திய நாடுகளில் அச்சத்துடன் பார்க்கப்படுகிறது. ட்ரம்புக்கான கொலை மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது.
ட்ரம்பின் அப்போதைய பேச்சு:
முன்னதாக கடந்த 2020ல் சுலைமானி கொல்லப்பட்டபோது அப்போது அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் பேசியதும் கவனிக்கத்தக்கது.
அவர் பேசும்போது, "சமீபகாலமாக இராக்கில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் வீரர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் சுலைமானியின் வழிகாட்டுதலின்படியே நடந்துள்ளன. அப்பாவி மக்களின் மரணத்தையே தன் ஆர்வமாகவும் விருப்பமாகவும் கொண்டிருந்தார் சுலைமானி. அவர் டெல்லி முதல் லண்டன் வரை நடக்கும் பயங்கரவாத சதிகளுக்குப் பங்காற்றியுள்ளார்.
சுலைமானியின் பல அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களை நாம் இன்றும் நினைவில் வைத்து மதிக்கிறோம். தற்போது அவரின் பயங்கரவாத ஆட்சி முடிந்துவிட்டது என்பதில் ஆறுதல் கொள்வோம். அமெரிக்கா நேற்று செய்ததை நீண்ட காலத்துக்கு முன்னரே செய்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவரவே நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். போரை உருவாக்க அல்ல" என்று பேசியிருந்தார்.
ட்ரம்ப் பார்வையில் போர், ஈரான் பார்வையில் படுகொலை. இதற்கு முடிவு தான் என்ன?!