இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக பதவி ஏற்றதும் கொழும்பில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு ரணில் தனது பணிகளை தொடங்குவார் என அவரது கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக. இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர்.
அலறிய ராஜபக்சே
போராட்டக்காரர்களுக்கு பயந்து ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா மற்றும் அவரது பாதுகாவலர் தற்கொலை செய்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. ராஜபக்சே குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருந்த போராட்டாக்காரர்கள் அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்கு தீ வைத்தனர். அத்துடன் ஆளுங்கட்சி எம்.பிக்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர்.
ஆலோசனை நடத்திய அதிபர்
இந்த நிலையில்தான் இலங்கையில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈடுபட்டிருந்தார். பல்வேறு தலைவர்களை அழைத்து பேசிய அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் சஜித் அதை மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்ச தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.