இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுள்ளார். அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூர்யா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 


இலங்கையின் 8ஆவது அதிபரான கோட்டபய ராஜபக்ச, தனது ராஜினாமா கடிதத்தை இன்று அளித்துள்ள நிலையில், இடைக்கால அதிபர் பதவி ரணிலுக்கு கிடைத்துள்ளது. வரும் ஜூலை 20ஆம் தேதி, புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டபய ராஜபக்ச பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. எரிவாயு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நாடுகளின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.


கடந்த மே 9ஆம் தேதி கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்கியதையடுத்து, அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


முன்னதாக, போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், இலங்கை அதிபர் கோட்டபய நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இச்சூழலில், அங்கிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதையடுத்து, மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல தனி ஜெட் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு அந்நாட்டு அரசிடம் கோட்டபய கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.


மாலத்தீவில் கோட்டபயவுக்கு எதிராக எதிர்ப்பு தீவிரமான நிலையில், தனியார் ஜெட் மூலம் மாலத்தீவிலிருந்து சிங்கபூருக்கு சென்றுள்ளார். இதற்கு மத்தயில், இலங்கையில் எதிர்கட்சிகள் இணைந்து அனைத்து கட்சி அரசை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அரசும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை கேட்டு கொண்டு உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இதனிடையே, நாட்டின் இடைக்கால அதிபராக பிரதமர் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். இலங்கை அரசின் செய்தி நிறுவனமான ரூபவாஹினியின் தொலைக்காட்சி நிலையத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து அதன் ஒளிபரப்பை சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது. 


செவ்வாய் இரவு கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோட்டபய, அவரது மனைவி, அவரது பாதுகாவலர்கள் என நான்கு பேர் Antonov-32 ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவுகளுக்கு கிளம்பியுள்ளார். மாலத்தீவுகளுக்கு சென்ற அவர்கள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என விமான நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண