முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனின் தாயார் பிரதமர் மோடிக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சாந்தன் விடுதலை:
கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி, பேரறிவாளன் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரில் கடந்தாண்டு மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதிகள் விடுதலை செய்தனர். இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் 4 பேரும் திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு மேலாகியும் இவர்கள் அங்கேயே இருப்பதால் சமூக ஆர்வலர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரதமருக்கு கடிதம்:
இப்படியான நிலையில், தன் சொந்தநாடான இலங்கைக்கு செல்ல அனுமதி கேட்டு சாந்தன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் அதில் விடுதலை கிடைத்த பிறகும் கடந்த 6 மாதமாக, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். முகாமில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதை தெரிவித்து, இங்கு ரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும் என்கின்றனர். என்னை போல வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் எப்படி ரத்த உறவுகள் இருக்கும். எனவே சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் தனது மகனை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு சாந்தனின் தாயார் பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதில், எனது இன்னொரு கண்ணும் பார்வையிழந்து போகும் முன் என் மகனை நான் பார்க்க வேண்டும். இந்திய நாட்டின் பிரதமர் எனக்கும் பிள்ளை தான். என்னை தாயாக அவர் எண்ணி எனது மகன் சாந்தனை நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.