குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு 40 மணி நேரம் தங்கி, 23 நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குறிப்பாக, இரு நாட்கள் நடைபெறும் குவாட் மாநாட்டின் இறுதி நாளான இன்று, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள், இந்த அமைப்பில் உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள், உலகளாவிய பிரச்னைகள் குறித்த பரஸ்பர கருத்து பரிமாற்றம் இருக்கும் என்பதால், இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. 




முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அழைத்ததன் பேரில், இந்திய பிரதமர் மோடி, இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அதே போல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தனி விமானம் மூலம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்த மாநாடு மட்டுமல்லாது 23 நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார். சராசரியாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி என்கிற விகிதத்தில், பிரதமரின் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டிருந்தது. 


குவாட் மாநாடு மட்டுமின்றி, அங்கு வரும் அமெரிக்க அதிபர் பைடனுடன் இருதரப்பு பேச்சு வார்த்தையிலும் ஈடுபட உள்ளார். அதில், வர்த்தகம், கல்வி, பருவநிலை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குவாட் மாநாட்டில் பங்கேற்க, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த அதிபர் மற்றும் பிரதமர்கள் ஒன்றாக புறப்பட்டனர். அப்போது, அனைவருக்கும் முன், வீரநடை போட்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்களை வழிநடத்திச் செல்வதைப் போன்று முன்னோக்கிச் சென்றார். 




வல்லரசான அமெரிக்காவின் அதிபர் பைடன் கூட, மோடியின் பின்னால் அணி வகுத்து வந்தார். அந்த போட்டோ தற்போது, உலகளாவிய அளவில் வைரல் ஆகி வருகிறது. உலக நாடுகளை, வளர்ந்த நாடுகளை இந்தியா தன் பக்கம் ஈர்த்து வருகிறது என்கிற பேச்சுக்கு வலு சேர்க்கும் விதமாக, இந்த போட்டோ இருப்பதாக பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் சிலாகித்து வருகின்றனர். 










உலக அளவில் கவனம் பெற்று வரும், குவாட் மாநாட்டு தொடர்பான அப்டேட்டில், இந்த போட்டோவும், தற்போது வைரலாகி வருகிறது. ‛கெத்தா நடந்து வாறான்... கேட்டையெல்லாம் கடந்து வாறான்...’ என , பேட்டை பாடல் வரிகளை வைத்து, மீம்ஸ்கள் தட்டத் தொடங்கியுள்ளனர்.