உக்ரைன் - ரஷ்யா போர்:
அண்டை நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், கடந்த மார்ச் மாதம் தொடங்கி 9 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரானது தொடங்கிய சில நாட்களிலேயே முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவிற்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி அளித்து வருகிறது. அண்மையில், இந்த போர் தொடர்பாக பேசிய புதின், உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயார் நிலையில் உள்ளதாகவும், சிலர் அதனை தடுப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
பொய் கூறும் மேற்கத்திய நாடுகள்:
இந்நிலையில், புத்தாண்டையொட்டி ரஷ்யா நாட்டு மக்களுக்காக, அதிபர் புதின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக ரஷ்யாவின் ஆட்சி பொறுப்பில் உள்ள புதின், இதுவரை இல்லாத அளவிற்கு ஒன்பது நிமிடங்களுக்கு புத்தாண்டு உரையாற்றியுள்ளார். அதில், மேற்கு நாடுகள் ரஷ்யாவிடம் பொய் கூறுகிறது. உக்ரைனில் சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளை ரஷ்யாவை தூண்டுகிறது.
பல ஆண்டுகளாக மேற்கத்திய உயர்குடி மக்கள் பாசாங்குத்தனமாக, அமைதி தொடர்பாக நம்மிடம் பேசி வருகின்றனர். ஆனால், உண்மையில், சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்கள் டான்பாஸில், பொதுமக்களுக்கு எதிராக வெளிப்படையான தீவிரவாதிகளை வழிநடத்தும் நவ-நாஜிக்களை மேற்கத்திய நாட்டினர் ஊக்குவிக்கின்றனர்.
உக்ரைனை பயன்படுத்தும் மேற்கத்திய நாடுகள்:
ஆனால், ரஷ்யாவை அழிக்கும் கருவியாக உக்ரைனைப் பயன்படுத்தும் மேற்குலகின் முயற்சிகளுக்கு தனது நாடு ஒருபோதும் அடிபணியாது. அதோடு, ரஷ்யா தனது தாய்நாட்டைப் பாதுகாக்கவும், அதன் மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெறவும் உக்ரைனில் போராடுகிறது என புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தீவிர தாக்குதல்:
இதனிடையே, உக்ரைனில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கீவ் நகரின் மீது, ரஷ்யா மீண்டும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யா ஏவிய 20 குரூயிஸ் ஏவுகணைகளில் 12-ஐ சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதற்குப் பிறகு ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.
ஜெலன்ஸ்கி சாடல்:
இதுதொடர்பாக பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யர்களின் எதிர்காலத்தை அந்நாட்டு அதிபர் புதின் அழித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய படைகளை வழிநடத்துவதற்குப் பதிலாக, அதன் பின்னே புதின் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். சனிக்கிழமை உக்ரைன் முழுவதும் ரஷ்யா குண்டுமழை பொழிந்ததாக குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, ரஷ்யாவை உக்ரைன் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.